Thursday, October 7, 2010

அரஃபா

அரஃபா

இது மக்காவிற்கு கிழக்கே 12 கல் தொலைவில் உள்ள மலையாகும்.அதைச்சுற்றியுள்ள மைதானத்திற்கு சொல்லப்படும் பெயர் அரஃபா ஆகும்.அரஃபா என்றால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளுதல் என்று பொருள்.

அல்லாஹ் விண்ணகத்திலிருந்து ஆதம் (அலை) அவர்களையும்,ஹவ்வா (அலை)அவர்களையும் பூமிக்கு இறக்கினான்.பிறகு இருவரும் அழுது பாவ மன்னிப்புத்தேடிய பின் இருவரையும் இங்கேதான் சந்திக்க வைத்தான்.இங்கே தான் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டனர்.அதனால் இதற்கு அரஃபா(அறிந்து கொண்ட இடம்) என்னும் பெயர் வந்தது.

அரஃபா மைதானம் சுமார் 8 மைல் நீளமும்,4 மைல் அகலமும் கொண்டதாகும்.இங்கே ஜபலே ரஹ்மத்(அருளின் மலை)என்று ஒரு மலையும் உண்டு.இந்த இடத்தில் வைத்து ஆதம்,ஹவ்வா(அலை) இருவர் மீதும் இரக்கம் காட்டி பாவங்களை மன்னித்து ஒன்று சேர்த்ததால் அப்பெயர் வந்தது.இந்த மலை சுமார் 200 அடி உயரம் இருக்கும்.இதன் மீது ஏறிச்செல்ல படிகள் உள்ளன.இதன் உச்சியின் மீது ஏறி நின்றுதான் நபி(ஸல்) அவர்கள் இறுதிப் பேருரை நிகழ்த்தினார்கள்.

அர்ஃபா மைதானத்தில் ஹாஜிகள் துல்ஹஜ் பிறை 9 இல் மாலை வரைத்தங்க வேண்டும்.இது ஹஜ்ஜின் முக்கிய கடமை(பர்ளு) ஆகும்.எவரேனும் சிறிது நேரமாவது இங்கு தங்கவில்லை என்றால் ஹஜ் முழுமை பெறாது.

இங்கு வைத்து கேட்கப்படும் பிரார்த்தனை உடனே அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நபி(ஸல்;) அவர்கள் கூறி உள்ளனர்.அவர்களும் இங்கே அழுது துஆ செய்து இருக்கின்றனர்.அதனால் மக்கள் கண்ணீர் விட்டு அழுது இங்கு அந்நாளில் துஆ செய்யும் காட்சி உள்ளத்தை உருக்குவதாக இருக்கும்.

மாலையானதும் மஃரிபு தொழாமல் முஸ்தலிஃபா சென்று ஹாஜிகள் மஃரிப்,இஷாவையும் சேர்த்து தொழுவர்.அர்ஃபாத்தில் தங்கும் நாளை அரஃபா நாள் என்பர்."இந்த அரஃபா நாளை விட எந்த நாளிலும் அல்லாஹ் தன் அடியார்களை நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை.மேலும் அல்லாஹ் மிகவும் அண்மையில் வந்திறங்கி வானவர்களிடம் ஹஜ்ஜு செய்பவர்களைப்பற்றி பெருமை பாராட்டி பேசுகிறான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அரஃபா நாள் வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அதற்கு ஹஜ்ஜுல் அக்பர் என்று சொல்லப்படும்.அது 70 ஹஜ்ஜுகளுக்கு சமமாகும் என்பது நாயக வாக்கு.

இங்கே மஸ்ஜிதுன் நமிரா என்ற பிரம்மாண்டமான பள்ளிவாசல் உள்ளது.அன்று லுஹரையும்,அஸரையும் சேர்த்து லுஹர் நேரத்திலேயே இமாம் தொழ வைப்பார்.பல லட்சம் மக்கள் அவர் பின்னால் நின்று தொழுவார்கள்.

ஒலி,ஒளிக்காட்சிகளை இங்கு காணுங்கள்.

2 comments:

ஜெய்லானி said...

ஜஸாக்கல்லாஹ் க்கைர்

ஸாதிகா said...

நன்றி சகோ ஜெய்லானி.