Friday, October 29, 2010

ஜமராத்



மினா என்னும் இடத்திலுள்ள குறிப்பிட்ட மூன்று இடங்களுக்கு ஜமராத் எனப்படும்.இம்மூன்று இடங்களும் ஒன்றுக்கொன்று சுமார் அரை பர்லாங் இடை வெளியில் உள்ளன.

நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் தங்கள் தவப்புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வின் ஆணைப்படி இறைவனுக்காக பலியிட அழைத்துச் சென்ற போது இப்லீஸ் நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் முன் தோன்றி அவர்களின் அந்த தியாகத்தை முறியடிக்க முயன்றான்.அவனை அறிந்து கொண்ட இப்றாஹீம் (அலை)அவர்கள் இப்லீஸ் மீது கல்லெறிந்து அவனை விரட்டினார்கள்.அதன் காரணமாக அம்மூன்று இடங்களிலும் கல் எறிவது வாஜிப் ஆக்கப்பட்டுள்ளது.

மினாவின் கூடாரங்களில் இருந்து போனால் முதலில் வருவது ஜம்ரத்துல் ஊலா என்றும்,அடுத்து வருவது ஜம்ரத்துல் உஸ்தா என்றும்,கடைசியில் உள்ளது ஜம்ரத்துல் அக்பர் என்றும் பெயர் சொல்லப்படுகின்றது.இவற்றை முறையே சிறிய ஷைத்தான்,நடு ஷைத்தான்,பெரிய ஷைத்தான் என்றும் மக்கள் கூறுகின்றனர்.

ஹாஜிகள் கல்லெறியும் போது சில சமயம் நெரிச்சலில் சிக்கி சிலர் இறந்தும் போவார்கள்.இதற்கு காரணம் என்னவென்றால் கல்லெறியுமிடம் சுமார் இருபது அடி அகலத்தில் முற்றிலும் சுவர் எழுப்பப்பட்டு ஒரு தூண் நடுவில் அமைக்கப்பட்டிருந்தது.

இப்பொழுது மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது.பல லட்சம் மக்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் இந்த இடத்தில் ஒன்று கூடுவதால் நெரிச்சல் ஏற்படுகின்றது.எனவே மிகவும் கவனமாக கல்லெறிய வேண்டும்.

இப்பொழுது சவுதி அரசாங்கம் அவ்விடத்தில் இரண்டடுக்கு மேம்பாலங்கள் கட்டி போவதும்,வருவதும் ஒரு வழிப்பாதையாக ஆக்கி வசதிகளை அமைத்துத்தந்துள்ளது.இதனால் ஹாஜிகள் இப்போதெல்லாம் நெரிசலும்,சிரமமும் இல்லாமல் போய் கல்லெறிந்து வருகின்றனர்.



Wednesday, October 13, 2010

அல் குர்ஆனின் அழகிய திருநாமங்கள்



பேரற்புதம் வாய்ந்த எதற்கும் நிகரில்லாத திருக்குர்ஆனுக்கு அல்லாஹ் குர் ஆனிலேயே பல இடங்களில் பல்வேறு பெயர்களைக் குறிப்பிட்டுள்ளான்.ஒவ்வொரு பெயரும் திருகுர் ஆனின் சிறப்புத்தன்மையை தெரிவிப்பதாக அமைந்துள்ளது.ஒரு பொருளுக்கு அதிகமான பெயர்கள் இருப்பது அதனுடைய சிறப்பையும்,உயர்வையும் காட்டக்கூடியது என்பது திண்ணம்.

1.அல் கிதாப் - வேதநூல்

2.அல் பயான் - தெளிவுரை

3.அல் புர்ஃகான் - நன்மையையும் தீமையையும் பிரித்தறிவிப்பது

4.அல் புர்ஹான் - தெளிவான அத்தாட்சி

5.அத் திக்ரு - நினைவுறுத்துவது

6அந் நூர் - ஒளி

7.அல் ஹக்கு - சத்தியமானது

8.அல் கரீம் - கண்ணியத்திற்குறியது

9.அல் முபீன் - தெளிவுபடுத்தக்கூடியது

10.அல் ஹகீம் - ஞானம் நிறைந்தது

11.அல் அஜீஸ் - மதிப்பிற்குறியது

12.அல் ஹுதா - நேர்வழி

13.அர் ரஹ்மத் - அருள்

14.அஷ் ஷிபா - நிவாரணமளிப்பது

15.அல் மவ்இளத் - நல்லுபதேசம்

16.அல் ஹிக்மத் - ஞானம்

17.அல் முஹைமின் - பாதுகாவலாக இருப்பது

18.அல் கய்யிம் - உறுதியானது

19.அந் நிஃமத் - அருட்கொடை

20.அர் ரூஹ் - உயிருள்ளது

21.அத் தன்ஜீல் - இறக்கிவைக்கப்பட்டது

22.அல் ஹுக்மு - சட்டம்

23.அல் முபாரக் - புனிதமாக்கப்பட்டது

24.அல் முஸத்திக் - உண்மையாக்கி வைக்கக்கூடியது

25.அல் பஷீர் - நற்செய்தி கூறுவது

26.அந் நதீர் - அச்சுறுத்தி எச்சரிப்பது.

27.அல் முதஹ்ஹரா - பரிசுத்தமாக்கப்பட்டது

28.அல் முகர்ரமா - சங்கைக்குறியது

29.அல் மஜீத் - மேன்மைக்குறியது

30.அல் அரபிய்யு - அரபி மொழியுடையது

31.அல் மர்ஃபூஆ - உயர்வானது

32.அல் அஜப் - ஆச்சரியமானது

33.அல் பஸாயிர் - ஆதாரமுள்ளது

34.அத் திக்ரா - நினவூட்டும் உபதேசம்

35.ஹப்லுல்லாஹ் - அல்லாஹ்வின் கயிறு






Sunday, October 10, 2010

முஸ்தலிஃபா


முஸ்தலிஃபா என்பது மினாவுக்கும்,அரஃபாத்துக்கும் இடையில் உள்ள ஒரு இடமாகும்.இந்த இடத்தைப்பற்றி அல்லாஹ் அல் குர் ஆனில் கூறுகின்றான்."நீங்கள் அரஃபாவிலிருந்து திரும்பினால் 'மஷ் அருல் ஹராம்'என்னுமிடத்தில் அல்லாஹவை திக்ரு செய்யுங்கள்"(2:198) என்று.இங்கு குர் ஆனில் சொல்லப்பட்ட இடம் முஸ்தலிஃபா ஆகும்.

துல் ஹஜ் மாதம் 9,10 ஆவது நாள்களுக்கு இடையே உள்ள இரவில் ஹாஜிகள் இங்கே தங்க வேண்டும்.அதைத்தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.முஸ்தலிஃபாவில் உள்ள பள்ளிவாசலுக்கு பெயர்தான் 'மஸ்ஜிதுல் ஹராம்' என்பதாகும்.இந்த பள் ளியில் தொழுவது சிறப்புக்குறிய காரியமாகும்.இங்கேயும்,முஸ்தலிஃபா ,மைதானத்திலும் துஆ ஒப்புக்கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.

நபி (ஸல்)அவர்கள் ஹஜ் செய்த பொழுது துல்ஹஜ் பிறை 9ஆம் நாள் சூரியன் மறைந்த பிறகு அரஃபாவிலிருந்து புறப்பட்டு,இரவானதும் முஸ்தலிஃபா வந்து சேர்ந்தார்கள்.இங்கு மஃரிப்,இஷா தொழுகை இரண்டையும் ஒரு பாங்கு,ஒரு இகாமத் சொல்லித்தொழுதார்கள்.இரண்டுக்குமிடையிலோ,அதற்கு பின்போ யாதொரு நபில் தொழுகையும் தொழுகவில்லை.சுபுஹு தொழுகையை விரைவாக தொழுது விட்டு தல்பியா ஓதியவாறு மினாவுக்குப்புறப்பட்டனர்.அப்போது கல்லெறிவதற்காக நபி(ஸல்)அவர்கள் கேட்டதன் படி இபுனு அப்பாஸ்(ரலி) அவர்கள் பொடிக்கற்களைப் பொறுக்கிக்கொடுத்தனர்.

இதன் படி அங்கே ஹாஜிகள் 70 பொடிக் கற்களைப் பொறுக்கிக்கொள்ள வேண்டும்.பாலைவனம் நிறைந்த அந்த நாட்டில் முஸ்தலிஃபாவில் மட்டும் எங்கு பார்த்தாலும் பொடிக்கற்களாவே தென் படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஹாஜிகள் கல் பொறுக்குகின்றனர்.கல் பற்றாக்குறை வருவதே இல்லை.இது அல்லாஹ்வின் அற்புதமாக உள்ளது.இந்த இடம் துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதில் விஷேஷ அந்தஸ்த்தைப்பெறுகின்றது.

முஸ்தலிஃபாவில் தங்கிய ஹாஜிகள் அனைவரும் மினாவை நோக்கி நகர்ந்து செல்வர்,அப்போது ஒரே மைதானத்தில் ஹாஜிகள் அனைவரையும் பார்க்கும் பொழுது மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு முன்னால் எல்லா மனிதர்களும் நிறுத்தப்படும் காட்சி நினைவுக்கு வரும்.

ஒளி,ஒலிக்காட்சிகளைக்காண இங்கு கிளிக் செய்யுங்கள்

Thursday, October 7, 2010

அரஃபா

அரஃபா

இது மக்காவிற்கு கிழக்கே 12 கல் தொலைவில் உள்ள மலையாகும்.அதைச்சுற்றியுள்ள மைதானத்திற்கு சொல்லப்படும் பெயர் அரஃபா ஆகும்.அரஃபா என்றால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளுதல் என்று பொருள்.

அல்லாஹ் விண்ணகத்திலிருந்து ஆதம் (அலை) அவர்களையும்,ஹவ்வா (அலை)அவர்களையும் பூமிக்கு இறக்கினான்.பிறகு இருவரும் அழுது பாவ மன்னிப்புத்தேடிய பின் இருவரையும் இங்கேதான் சந்திக்க வைத்தான்.இங்கே தான் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டனர்.அதனால் இதற்கு அரஃபா(அறிந்து கொண்ட இடம்) என்னும் பெயர் வந்தது.

அரஃபா மைதானம் சுமார் 8 மைல் நீளமும்,4 மைல் அகலமும் கொண்டதாகும்.இங்கே ஜபலே ரஹ்மத்(அருளின் மலை)என்று ஒரு மலையும் உண்டு.இந்த இடத்தில் வைத்து ஆதம்,ஹவ்வா(அலை) இருவர் மீதும் இரக்கம் காட்டி பாவங்களை மன்னித்து ஒன்று சேர்த்ததால் அப்பெயர் வந்தது.இந்த மலை சுமார் 200 அடி உயரம் இருக்கும்.இதன் மீது ஏறிச்செல்ல படிகள் உள்ளன.இதன் உச்சியின் மீது ஏறி நின்றுதான் நபி(ஸல்) அவர்கள் இறுதிப் பேருரை நிகழ்த்தினார்கள்.

அர்ஃபா மைதானத்தில் ஹாஜிகள் துல்ஹஜ் பிறை 9 இல் மாலை வரைத்தங்க வேண்டும்.இது ஹஜ்ஜின் முக்கிய கடமை(பர்ளு) ஆகும்.எவரேனும் சிறிது நேரமாவது இங்கு தங்கவில்லை என்றால் ஹஜ் முழுமை பெறாது.

இங்கு வைத்து கேட்கப்படும் பிரார்த்தனை உடனே அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நபி(ஸல்;) அவர்கள் கூறி உள்ளனர்.அவர்களும் இங்கே அழுது துஆ செய்து இருக்கின்றனர்.அதனால் மக்கள் கண்ணீர் விட்டு அழுது இங்கு அந்நாளில் துஆ செய்யும் காட்சி உள்ளத்தை உருக்குவதாக இருக்கும்.

மாலையானதும் மஃரிபு தொழாமல் முஸ்தலிஃபா சென்று ஹாஜிகள் மஃரிப்,இஷாவையும் சேர்த்து தொழுவர்.அர்ஃபாத்தில் தங்கும் நாளை அரஃபா நாள் என்பர்."இந்த அரஃபா நாளை விட எந்த நாளிலும் அல்லாஹ் தன் அடியார்களை நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை.மேலும் அல்லாஹ் மிகவும் அண்மையில் வந்திறங்கி வானவர்களிடம் ஹஜ்ஜு செய்பவர்களைப்பற்றி பெருமை பாராட்டி பேசுகிறான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அரஃபா நாள் வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அதற்கு ஹஜ்ஜுல் அக்பர் என்று சொல்லப்படும்.அது 70 ஹஜ்ஜுகளுக்கு சமமாகும் என்பது நாயக வாக்கு.

இங்கே மஸ்ஜிதுன் நமிரா என்ற பிரம்மாண்டமான பள்ளிவாசல் உள்ளது.அன்று லுஹரையும்,அஸரையும் சேர்த்து லுஹர் நேரத்திலேயே இமாம் தொழ வைப்பார்.பல லட்சம் மக்கள் அவர் பின்னால் நின்று தொழுவார்கள்.

ஒலி,ஒளிக்காட்சிகளை இங்கு காணுங்கள்.

Wednesday, October 6, 2010

மினா





மினா


மக்காவிற்கு ஐந்துமைல் தூரத்தில் அரபாத் செல்லும் வழியில் உள்ள ஒரு ஊருக்குப்பெயர்தான் மினாவாகும்.மினா என்றால் விருப்பம் என்று பொருளாகும்.இங்குதான் ஆதம் நபி(அலை) அவர்கல் சுவனம் மீள் விரும்பியதன் காரணமாக இவ்விடத்திற்கு இந்தப்பெயர் ஏற்ப்பட்டது என்று கூறப்படுகின்றது.

இங்கே இரண்டு நீளமான தெருக்கள் உள்ளன.அவற்றில் பெரும்பாலும் கட்டிடங்கள் உள்ளன.எனினும் பெரும்பாலும் அவை காலியாகவே இருக்கும்.ஹஜ் காலங்களில் மட்டும் வாடைகைக்கு விடப்படும்.

மேலும் நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து சுமார் 1400 ஆண்டுகளாக அந்த இடம் ஹஜ் கடமையை நிறை வேற்றுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.எனவே ,இங்கே வீடு,கடைகள் போன்ற எந்த கட்டிடங்களும் கட்டக்கூடாது என்று சவுதி அரசாங்கம் தடை விதித்துள்ளது.ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்தில் தங்கித்தான் ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள்.இங்கு துல்ஹஜ் பிறை8 ,மற்றும் 10,11,12,அகிய நாண்கு நாட்கள் ஹாஜிகள் தங்கி இருப்பது அவசியமாகும்.

சுமார் 30 லட்சம் ஹாஜிகள் கூடாரமடித்துத் தங்கக்கூடிய அளவு வசதி உள்ள பிரமாண்டமான மைதானம் இங்கே உள்ளது.சவுதி அரசாங்கம் தீ பிடிக்காத குளிர்சாதனவசதி உள்ள சுமார் 30 லட்சம் ஹாஜிகளுக்கு தேவையான கூடாரங்களை தண்ணீர் வசதியுடன் ஏற்படுத்தித்தந்திருக்கின்றது.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் மகன்இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப்பலியிட முயற்சித்த இடமும் இதுதான்.எனவே ஹாஜிகள் இங்கே குர்பானி கொடுக்க வேண்டும்.மேலும் ஹாஜிகள் ஷைத்தானுக்கு கல் எறியும் ஜம்ரா என்ற இடங்களும் இங்குதான் உண்டு.இங்கு மஸ்ஜிதுன் கைப் என்ற பள்ளிவாசலும் உண்டு.இங்கு ஆதம்(அலை) அவர்களும் மற்ற எழுபது நபிமார்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் அந்தப்பள்ளியில் தங்குவது விஷேஷமானது என்றும் கூறப்படுகின்றது.

மேலும் மினா துஆ ஒப்புக்கொள்ளப்படும் இடமாகவும் இருக்கிறது.ஹாஜிகள் ,இங்கே அதிகமாக வணக்கங்களில் ஈடு படவேண்டும்.ஹஜ்ஜுடைய ஐந்து நாட்களைத்தவிர வருடத்தின் மற்ற நாட்களில் காலியாகவே இருக்கும்.


Tuesday, October 5, 2010

ஸஃபா - மர்வா




"இது கஃபாவுக்கு அருகில் உள்ள இரு குன்றுகளின் பெயர்களாகும்."இதைப்பற்றி அல்லாஹ் அல் குர் ஆனில்

"நிச்சயமாக ஸஃபாவும்,மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும்.(2:158)என்று கூறுகின்றான்.

ஆதம் ஸஃபியுல்லாஹ்(அலை)அவர்கள் ஸஃபா மலை மீது உட்கார்ந்ததால் அதற்கு அந்தப் பெயர் வந்தது என்றும்,ஹவ்வா (அலை) அவர்கள் மர்வா மலை மீது உட்கார்ந்ததினால் மர்வா(பெண் - மனைவி)என்று பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.அரபிகள் இரு மலைகளிலும் அஸஃப்,நாயிலாஎன்ற சிலைகளை வைத்து தொங்கோட்டம் ஓடித் தொட்டு வந்தனர் என்றும் பின்னர் ,அரபிகள் இஸ்லாத்தை ஏற்ற பின் அச்சிலைகள் அகற்றப்பட்டன.என்றும் வரலாறு கூறுகின்றது.பின்னர் அதில் தொங்கோட்டம் ஓடுவதில் மக்கள் ஐயமுற்றபோது அல்லாஹ் அதனால் குற்றமில்லை என்று செய்தி அனுப்பினான்.

மேலும் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் நபி இப்றாஹீம்(அலை) ,தங்கள் மனைவி ஹாஜரா,குழந்தை இஸ்மாயீல் இருவரையும் இங்கே அல்லாஹ்வின் கட்டளைப்படி கொண்டு வந்து விட்டு சென்றனர்.மனிதர்கள் இல்லாத பாலைவனமாக இருந்த அந்த இடத்தில் குழந்தை இஸ்மாயீலை படுக்க வைத்துவிட்டு,அன்னை ஹாஜரா ஸஃபா- மர்வா மலைகளுக் கிடையே தண்ணீரைத்தேடி இங்குமங்கும் ஓடினார்கள்கள்.அன்னை ஹாஜரா(அலை)அவர்கள் ஏழுதடவை ஓடி இறைஞ்சியதால் அவர்களின் துஆவை ஏற்றுக்கொண்டு அல்லாஹ் குழந்தையின் காலடியில் ஜம்ஜம் நீரைத் தந்தான்.அவர்கள் ஓடிய அந்த ஓட்டத்தை அல்லாஹ் நமக்கு ஹஜ்ஜு,மற்றும் உம்ராவின் வணக்கமாக ஆக்கித்தந்துள்ளான்.

எனவே ஹஜ்ஜோ,உம்ராவோ செய்யக்கூடியவர்கள் ஸஃபா - மர்வா இடையே ஏழு முறை தொங்கோட்டம் ஓடுவது வாஜிபாக ஆக்கப்பட்டுள்ளது.

ஹாஜிகளின் எண்ணிக்கை பல மடங்கு கூடி விட்டதால் ,ஸஃபா,மர்வாவில் போக்கு வரத்து வசதிக்காக மேலும்,கீழுமாக 4 மடங்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Sunday, October 3, 2010

ஜம் ஜம் கிணறு

ஜம் ஜம் கிணறு

இது மக்காவின் கஃபாவுக்கு அருகிலுள்ள சிறப்பான கிணறாகும்.சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்,நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் ,தங்கள் மனைவி ஹாஜரா அம்மையாரையும்,மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்காவில்,இப்போதிருக்கும் கஃபா இருக்கும் இடத்தில் கொண்டுவந்து தனியாக விட்டு விட்டு சென்றார்கள்.அப்பொழுது குழந்தை இஸ்மாயீல் தாகம் மேலிட்டு கதறி அழுதார்கள்.

தம்மிடம் பாலோ,தண்ணீரோ இல்லாத அன்னை தண்ணீர் தேடி ஸஃபா - மர்வா மலைகளுக்கிடையே ஏழுதடவை நடந்தும் ,ஓடியும் தண்ணீரை பெற முடியவில்லை.

அப்பொழுது தன்னந்தனியே கிடந்த குழந்தை இஸ்மாயீல் (அலை) தன் பிஞ்சுக்கால்களால் தரையில் உதைத்து அழுத பொழுது அவ்விடத்தில் தண்ணீர் கொப்பளித்துக்கொண்டு வந்தது.அதை வழிந்தோடா வண்ணம் மண்ணால் அதனை சுற்றி ஒரு மேடெழுப்பி நீரைத்தேக்கினார்கள்.

அதுவே ஜம்ஜம் கிணறாக விளங்குகின்றது."ஜம் ஜம்"என்றால் அதிகம் என்று பொருள்.நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன் ஜுர்ஹூம் கூட்டத்தினர் இந்தக்கிணற்றினை அடையாளம் தெரியாமல் மூடி விட்டு போய் விட்டனர்.பின்னர் நபி(ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் கனவில் இடம் காட்டப்பட்டு இக்கிணற்றைத்தோண்டி அவர்களே பராமரித்து வந்தனர்.

நபி(ஸல்) அவர்கள் சிறு பிராயத்தில் ஒரு தடவை இக்கிணறு மராமத்து செய்யப்பட்டது.அதில் நபி(ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள்.அப்பொழுது இதன் ஆழம் 90 அடி.அகலம் 6 அடி.

அதன் நீர் ருசியில் சற்று இளைப்பாக இருந்தாலும் இதில் பல்வேறு மருத்துவகுணங்களும்,உடல் நலத்திற்குத்தேவையான பல சிறப்புத்தன்மைகளும் அமைந்துள்ளதால் ,"பூமியில் உள்ள நீர்களில் மிகச்சிறந்தது ஜம்ஜம் நீராகும்"என்பதாகவும்,"ஜம்ஜம் எதற்காக குடிக்கப்படுகின்றதோ அதற்குரியதாகும்"என்பதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்.

மேலும் இந்தக்கிணற்றருகே நின்று துஆ கேட்டால் உடனே ஏற்றூகொள்ளப்படும் என்றும் கூறினார்கள்.மேலும் இந்நீர் வற்றாத நீர்ச்சுணை ஆகும்.ஒரு தடவை மருத்துவர்கள் சுகாதரத்திற்காக இக்கிணற்றை சுத்தப்படுத்த ஆலோசனை சொன்ன பொழுது அதை ஏற்ற சவுதி அரசாங்கம் எட்டு பம்பு செட்டுகள் வைத்து 15 நாட்கள் இரவு பகலாக இதன் நீரை இறைக்க முயன்றும் முடியவில்லை.நீர் குறைவதற்கு பதில் ஒரு அங்குலம் உயர்ந்திருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஹாஜிகள் உபயோகித்தும்,தங்களுடன் லட்சக்கணக்கான கேன்களில் எடுத்துச்சென்றும் அது குறைவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது ஹாஜிகள் ஜம்ஜம் கிணற்றினை பார்க்க இயலாது.கஃபாவின் விஸ்தரிப்புக்கு முன்பு ஜம்ஜம் கிணற்றின் பழைமையான தோற்றம் படத்தில் காண்பது.

மகாமு இப்றாஹீம்



Text Color


மகாமு இப்றாஹீம்

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் உத்தரவுப்படி கஃபாவை கட்டினார்கள்.அப்போது நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் உதவியாளராக இருந்தார்கள்.நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் ஒரு சிறிய கல் மீது நின்று கட்டிடத்தைக்கட்டினார்கள்.கட்டிடம் உயர,உயர கல்லும் வளர்ந்து கொண்டே இருந்தது.

அந்த கல்லுக்கு பெயர்தான் மகாமு இப்றாஹீம்.(இப்றாஹீம் நபி நின்ற இடம்) என்று சொல்லப்படுகின்றது.அக்கல்லின் மீது இப்றாஹீம் (அலை) அவர்களின் பாதங்கள் இரண்டும் பதிந்துள்ளது.அவற்றை உற்று கவனித்துப் பார்த்தால் நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் ஆறடிக்கும் மேல் உயரம் உள்ளவர்களாக இருந்திருப்பார்கள் என்று தெரிகிறது.

அப்துல் முத்தலிப் அவர்கள் தம்முடைய முதுமையில் தம்மக்களை நோக்கி தம் அருமைப்பேரர் முஹம்மது(ஸல்) அவர்களுடைய பாதத்தினை ஒத்திருப்பதாகவும்,அவர்களை நன்கு கவனித்து வரவேண்டும் என்றும் கூறியதாக ஒரு வரலாறு உண்டு.

இக்கல் நெடுங்காலமாக கஃபாவின் வாசலுக்கும் ருக்னுல் இராக்குக்கும் இடையில் உள்ள கஃபாவின் சுவரில் பதிக்கப்பட்டிருந்ததென்றும் நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கண்ட பொழுது இதை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தி கஃபாவின் வாசலின் பக்கம் வைத்து இதன் மீது சிறு கட்டிடம் எழுப்பினர் என்றும் அவர்கள் இவ்வாறு செய்ததற்கு காரணம் மக்கள் கஃபாவை சுற்றி வரும் பொழுது இதனையும் சேர்த்து சுற்றி வருவதாக கருதி விடக்கூடாது என்பதற்காகவே என்றும் கூறப்படுகின்றது.

பிறகு உமர்(ரலி) அவர்கள் ஆட்சியில் மக்களின் நெரிசலை தவிர்க்க இது கஃபாவிற்கு சற்று கிழக்கில் தள்ளி வைக்கப்பட்டு இதன் மீது சிறு கட்டிடம் கட்டப்பட்டது.தற்போது தங்க முலாம் பூசப்பட்ட கூண்டுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.ஹாஜிகள் அனைவரும் கண்டுவரலாம்.

மகாமு இப்றாஹீமைத் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்று உமர் (ரலி) அவர்கள் அண்ணல் நபியவர்களிடம் கூறி வந்ததற்கேற்ப இறை கட்டளை வந்தது.

"மகாமு இப்றாஹீம் என்னும் இடத்தை தொழுமிடமாக ஆக்கிக் கொள்வீர்களாக! அல் குரான்2:125
இது துஆ ஒப்புக்கொள்ளப்படுகின்ற இடமாகவும் தவாப் முடிந்ததும் இங்கே இரண்டு ரகா அத் தொழ வேண்டும்.

Friday, October 1, 2010

ஹஜருல் அஸ்வத்




ஹஜருல் அஸ்வத்

இதன் பொருள் 'கருப்புக்கல்' என்பதாகும்.இது கருஞ்சிவப்பு நிறமாக இருந்தது.அரைவட்ட வடிவில் உள்ள இது ஆறு அங்குல உயரமும்,எட்டு அங்குல அகலமும் உள்ளதாகும்.இது தண்ணீரில் மிதக்கும் தன்மை உடையதாகும்."வானத்திலிருந்து ஆதம் நபி (அலை) அவர்கள் இதைக்கொண்டுவந்தனர்.அப்பொழுது அது பாலை விட வெண்மையாக இருந்தது.ஆதமுடைய மக்களின் பாவங்களால் அது கருப்பாகி விட்டது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள்(ஆதாரம் திர்மிதி)

இந்தக்கல் ஒளி வீசக்கூடியதாக இருந்தது என்று அது ஒளி பாய்ந்த இடங்கள் வரை புனிதபூமி (ஹரம்) என்று நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் நிர்ணயித்தார்கள்.

நூஹ்(அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயத்தின் போது இது அபுகுபைஸ் மலையில் வைத்து பாதுகாக்கப்பட்டது.

இப்ராஹீம் (அலை)அவர்கள் கஃபாவை கட்டிய பொழுது ,ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதனை கஃபாவின் தென் கிழக்கு மூலையில் பதித்தார்கள்.அது கஃபாவை தவாஃப் செய்வதற்கு துவக்க இடமாக ஆக்கப்பட்டுள்ளது.

பிறகு பனூ ஜர்ஹம் கூட்டத்தார் மக்காவை காலி செய்த பொழுது இதை ஜம்ஜம் கிணற்றுக்குள் போட்டு புதைத்து விட்டு சென்றனர்.பின்னர் நபி(ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் ஜம்ஜம் கிணற்றைத் தோண்டும் பொழுது இதனை கண்டு பிடித்து எடுத்து கஃபாவில் இதற்குறிய மூலையில் பதித்தார்கள்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு 35 வயதானபொழுது கஃபா புனர் நிர்மானம் செய்யப்பட்ட சமயம் இந்தக்கல்லை அதற்குறிய இடத்தில் எடுத்து வைக்கும் சிறப்பு நபி(ஸல்) அவர்களுக்கே கிடைத்தது.ஹிஜ்ரி 64 இல் ஏற்பட்ட நெருப்பால் இது மூன்று துண்டுகளாக உடைந்தது.அதை இபுனு ஜுபைர்(ரலி)அவர்கள் வெள்ளிக்கம்பியால் பிணைத்து இதற்குறிய இடத்தில் பிணைத்தனர்.

நபி(ஸல்) அவர்கள் இதனை முத்தமிட்டுள்ளார்கள்.மேலும் ஒட்டகத்தின் மேல் இருந்தவாறு தம் கைத்தடியால் தொட்டு கைத்தடியின் நுனியை முத்தமிட்டுள்ளார்கள்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, 'நீ தீங்கோ, நன்மையோ அளிக்கமுடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உன்னை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்' என்றார். (அறிவிப்பாளர்: ஆபிஸ் இப்னு ரபீஆ)


ஹாஜிகள் அதனை முத்தமிடுவது சுன்னத்.எனினும் கூட்டம் அதிகமாக இருக்கும் பொழுது மற்றவர்களைத் தள்ளி முண்டியடித்துச் செல்வது கூடாது.கூட்ட நேரத்தில் அதன் பக்கம் கையை காட்டி அதனை முத்தமிடுவது சிறந்ததாகும்

நன்றி:
தமிழ்நாடு ஹஜ்சர்வீஸ் சொஸைட்டி

கஃபா






கஃபா.இது மக்காவில் உள்ள இறை இல்லம்.இதன் முழுப்பெயர் "கஃபதுல்லா"ஆகும்.அரபி மொழியில் கஃபா என்றால் சதுர வடிவானது என்று பொருள்.

இதற்கு பைத்துல் ஹரம்(கண்ணியம் மிக்க வீடு - இரத்தம் சிந்துதல் நிகழக்கூடாத ,பாதுகாப்பான வீடு)என்றும் பெயர் சொல்லப்படும்.

இதனை வானம்,பூமி ஆகியவற்றை படைப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே அல்லாஹ் படைத்து விட்டான் என்று அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள்.எனினும் அது கட்டிடமாக இல்லாமல் மணல்மேடாக இருந்தது.அதில் வானவர்கள் அமர்ந்து வணக்கம் செய்தனர்.

பிறகு ஆதி பிதா ஆதம்(அலை) அவர்கள் உலகில் இறக்கப்பட்டதும்,அல்லாஹ்வின் ஆணைப்படி அதில் கட்டிடம் கட்டினார்கள்.

ஷீது நபி (அலை) அவர்கள் இதனை சுற்றி நாண்கு புறமும் சுவர் எழுப்பினார்கள்.

அடுத்து வந்த நூஹ் நபி (அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இது அழிந்தது.இருப்பினும் அடையாளமாக சிகப்பு நிற மணல் மேடு அங்கே இருந்தது.

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இப்றாஹீம் நபி (அலை) அவர்கள் அல்லாஹ்வின் ஆணைப்படி கஃபாவை கட்டினார்கள்.

முதன் முதலில் எமன் நாட்டு மன்னர் துப்பவு அஸத் என்பவர் கஃபாவின் மீது போர்வையை போர்த்தி கவுரவித்தார்.

எல்லாகாலத்தில் மனிதர்கள் இதனை புனிதமான இறை இல்லமாகக் கருதி மரியாதை செய்தனர்.இதனைக்கண்டு பொறாமைக்கொண்ட எமன் நாட்டு மன்னன் அப்ரஹா என்பவன் கி.பி 570 ஆம் ஆண்டு தன் யானைப்படையோடு வந்து இதனை அழிக்க வந்தான்.ஆனால் அல்லாஹ் சிறு பறவைகளின் வாயில் கற்களை வைத்து வீசி அப்படைகளை அழித்துவிட்டான்.

எல்லா நபிமார்களும்,இங்கே வந்து அல்லாஹ்வை தொழுது இருக்கின்றார்கள்.ஹஜ் செய்து இருக்கின்றார்கள்.முஹம்மது நபி (ஸல்)அவர்களும் இங்கு தொழுதார்கள்.

கி.பி 631- இல் மக்கா வெற்றி கொள்ளப்பட்டு இது முற்றிலும் முஸ்லிம்கள் வசம் வந்தது.சுமார் 1400 ஆண்டுகளாக தொடர்ந்து உலக முஸ்லிம்கள் யாவரும் ஹஜ்ஜு செய்யும் இடமாக இருந்து வருகின்றது.கஃபாவை சுற்றியுள்ள பகுதிகளை பல மன்னர்கள் விரிவு படுத்தி உள்ளார்கள்.கடைசியாக ஹிஜ்ரி 1040 -இல் துருக்கி ஆட்சியின் பொழுது ரிஸ்வான் ஆகா என்ற பொறியாளர் மற்றும் இந்திய கட்டிடகலை நிபுணர் மஹ்மூது ஆகியோரால் கட்டப்பட்டது.இப்பொழுது சவுதி அரசால் மிகப் பெரிய அளவில் விரிவு படுத்தப்பட்டு சுமார் 10 லட்சம் மக்கள் தொழும் பிருமாண்டமான மஸ்ஜித் ஆக அமைந்துள்ளது.

கருங்கல்லால் கட்டப்பட்ட கஃபாவின் உயரம் சுமார் 50 அடி,நீளம் 40 அடி,அகலம் 25 அடியாகும்.இதற்கு நாண்கு மூலைகள் உள்ளன.ருக்னுல் அஸ்வத்,ருக்னுல் யமானி,ருக்னுல் ஷாமி,ருக்னுல் இராக்கி ஆகியவையாகும்.இதனைச்சூழ 96 வாசல்கள் உள்ளன.9 மினாராக்கள் உள்ளன.எந்த நேரமும் எல்லா வாசல்களும் திறந்தே இருக்கும்.உலக முஸ்லிம்கள் அனைவரும் இந்த கஃபாவை நோக்கியே தொழுகின்றனர்.

நன்றி:
தமிழ்நாடு ஹஜ்சர்வீஸ் சொஸைட்டி

விருப்பம்

1.விழுங்க விரும்பினால் கோபத்தையும்,துக்கத்தையும் விழுங்கி விடுங்கள்.

2.உடுக்க விரும்பினால் உயர்வையும்,உண்மையையும் உடுத்திக்கொள்ளுங்கள்.

3.அறிய விரும்பினால் நன்மைகளையும் தீமைகளையும் அறிந்து கொள்ளுங்கள்.

4.கொடுக்க விரும்பினால் பிறருக்கு நலவைத்தருவதையும்,பயனளிக்கத்தக்கவற்றையும் கொடுங்கள்.

5.வாங்க விரும்பினால் ஏழை,அனாதைகளின் ஆசிகளை வாங்குங்கள்.

6.பேச விரும்பினால் இன்சொற்களையும்,நன் சொற்களையும் பேசுங்கள்.

7.அடிக்க விரும்பினால் மன இச்சைகளையும்,துவேஷங்களையும் அடித்து வீழ்த்துங்கள்.

8.களைய விரும்பினால் துர்பழக்கத்தையும்,முன்கோபத்தையும் களைந்துவிடுங்கள்.

9.உண்ண விரும்பினால் ஹலானவற்றியும்,தூயவனவற்றையும் உண்ணுங்கள்.

10.தர்கிக்க விரும்பினால் கண்ணியமானவர்களிடமும்,உயர்வானவர்களிடமும் தர்கியுங்கள்