Wednesday, September 29, 2010

மவுனத்தின் சிறப்பு


அபூபக்கர் சித்தீக்(ரலி)அவர்களின் மவுனம்

முதலாம் கலீஃபா ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக்(ரலி)அவர்கள் பெரும்பாலும் மவுனத்தையே அனுஷ்ட்டித்தார்கள்.அதிகமாக பேசுவதற்குறிய அபாயத்துக்கு அஞ்சி அதிகம் பேசுவதை வெறுத்தார்கள்.

ஒரு சமயம் உமர் (ரலி) அவர்கள் சித்தீக்(ரலி) அவர்களிடம் வந்து உரையாடத்தொடங்கினார்கள்.அது சமயம் சித்தீக் (ரலி) அவர்கள் தமது வாயில் இருந்த கற்களை எடுத்துவிட்டு பேசத்தொடங்கினார்கள்.

அது கண்டு உமர்(ரலி) அவர்கள் "என்ன காரணத்தினால் வாயில் கற்களை வைத்திருக்கின்றீர்கள்"எனக்கேட்டார்கள்.

அதற்கு சித்தீக் (ரலி) அவர்கள் "வாய் சும்மா இருந்தால் எதாவது வீண் பேச்சுக்கள் பேசும்.'வீண்பேச்சுக்கள் பேசுவதால் மனிதனின் உள்ளம் ஒளி மங்கி விடும்'என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதை நான் பல முறை கேட்டு இருக்கின்றேன்.ஆகவே என்னில் இருந்து வீண்பேச்சுக்கள் வெளிப்பட்டு இருக்காமல் இருக்க வாயில் கற்களை வைத்திருக்கின்றேன்.தேவைப்படும் பொழுது அதனை எடுத்துவிட்டு பேசுவேன்"என்றார்கள்;

தாஹா நபியின் தங்க உரைகள்:

ஆதமுடைய மக்களின் அநேக தவறுகள் அவர்களுடைய நாவுகளால் உண்டாகின்றன.

"இபாதத் (வழிபாட்டில்) மிகவும் எளிதானது மவுனம் கொண்ட நாவும், நற்குணமும் ஆகும்."

"நீ நல்லதையே பேசு, இல்லையேல் மவுனமாக இரு."

"யார் வாய்மூடிவிட்டாரோ அவர் ஈடேற்றம் பெற்றுவிட்டார். வயிறு, வெட்க உறுப்பு, நாவு இவற்றின் தீங்கை விட்டும் காக்கப்பட்டவர் எவரோ அவர் முழுவதும் காக்கப்பட்டவர் ஆகிறார்."

"எவன் அதிகம் பேசுவானோ, அவன் அதிகம் தவறு உள்ளவனாக இருப்பான். எவன் தவறுகள் உள்ளவனாக இருப்பானோ, அவன் அதிகம் பாவம் உள்ளவனாக இருப்பான். அவனுக்கு நரகம் மேலானதாகும்."

Tuesday, September 28, 2010

ராபியத்துல் பஸ்ரியா துஆ கேட்ட விதம்.


"எனது இறைவா!இம்மையில் நீ எனக்கு அளிக்க விரும்பும் கருணைகளை நீ உன் நேசர்களுக்கு வழங்குவாயாக!
எனக்கு நீயே போதுமானவன்.இறைவா!இம்மையிலும்,மறுமையிலும் அனைத்துக்கும் மேலாக நான் உன்னையே நேசிக்க விரும்புகின்றேன்.மற்றயாவும் விடுத்து உன்னையே சந்திக்க விரும்புகின்றேன்.
இறைவா!நான் நரகவேதனை விட்டும் நீங்குவதற்காக நான் உன்னை வணங்கினேயானால் என் தங்கும் இடம் நரகமாகட்டும்.நான் மரித்தபின் என்னை நரகத்தில் விட்டு அந்த நரகம் முழுதும் நிரம்பும் படியாக என் உடம்பை பெரிதாக்கி மற்ற எவரையும் நரகில் போட இயலாதாவாறு ஆக்குவாயாக!
இறைவா!சுவர்க்கத்தின் இன்பத்தினை அடையும் பொருட்டு நான் வணங்கினேயானால் எனக்கு அந்த சுவர்க்க வாசல் அடைபடட்டும்.
இறைவா!உன்னையே அடைய நான் வணங்கினேயானால் உனது அழிவற்ற தரிசனத்தை விட்டும் என்னை விட்டுவிடாதே"

சுப்ஹானல்லாஹ்.வரலாறு போற்றும் அந்த பக்திமான் ,உயர்ந்த பெண்மணி இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் கூட சுக வாழ்வை நாடாமல் அவர்கள் இறைவனை அடையும் அவாவை எண்ணும் பொழுது நம் கல்பு சிலிர்க்கின்றது.

Friday, September 24, 2010

வரலாற்றில் ஒரு பொன்னேடு

ஒரு நாள் அப்பாஸிய கலீஃபா ஹாரூன் ரஸீத் தம் நண்பர் ஒருவருடன் உணவு உண்டு கொண்டிருந்தார்.அப்பொழுது உணவுப்பொருட்கள் சிதறி விரிப்பில் விழுந்தன.நண்பர் அந்த உணவுப்பொருட்களை எடுத்து உண்ணலானார்.கலீஃபா ஹாரூன் ரஸீதுக்கு இது அறுவெறுப்பாகத்தோன்றியது.

நண்பரை ஏறிட்டுப்பார்த்தார்.எதற்காக கலீஃபா தம்மை ஏறிடுகின்றார் என்பதைனை உணர்ந்து கொண்ட நண்பர் இவ்விதம் கூறினார்.

"அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இப்படி சிதறி விழும் உணவுகளை எடுத்து அருந்துபவர்களுக்கு உணவின் பெருக்கம் - பரக்கத் எப்பொழுதும் இருக்கும்"என்று பகன்றதை கலீஃபாவுக்கு எடுத்துச்சொன்னார்கள்.

அதனை கேட்ட கலீஃபா "இது எனக்குத்தெரியாதே.இதனை நீங்கள் நான் அறியத்தந்தமைக்காக என் அன்புப்பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள்"என்று ஒர் உயரிய மணி மாலையை பரிசளித்தார்.

அதனைப்பெற்ருக்கொண்ட நண்பர்"பார்த்தீர்களா?இப்பொழுதுதான் சிதறிவிழுந்த உணவுப்பொருளை எடுத்து அருந்தினேன்.உடனே எனக்கு பரக்கத் கிடைத்து விட்டது"என்றார்.

அல்லாஹ்வின் ரசூலின் வாக்கு எத்தனை சத்தியமானது என்பதனை உணர்ந்த நண்பர்கள் இருவரும் சிலாகித்து மகிழ்ந்தனர்.

Wednesday, September 22, 2010

நபிமொழிஏழு வகை மக்களுக்கு அல்லாஹ் மறுமையில் தன் நிழலில் இடம் அளிப்பான்.
1.நீதியுள்ள தலைவன்
2.வணக்கத்தில் மூழ்கிய இளைஞர்.
3.ஜமாஅத்காக மசூதி செல்பவர்.
4.அல்லாஹ்வுக்காக நட்பு கொள்பவர்.
5.விபச்சாரம் புரிய மறுக்கும் பெண்.
6.இடக்கைக்கு தெரியாமல் வலக்கையால் தர்மம் கொடுப்பவர்.
7.தனிமையில் இறைபக்தியில் மூழ்கி கண்ணீர் வடிப்பவர்.

அ:அபூ ஹுரைரா
ஆ:புகாரி,முஸ்லிம்,திர்மிதி,நஸாயீ

நபிமார்களின் வழிமுறைகள் நாண்கு.
1.நாணமுறுவது
2.நறுமணம் பூசுவது.
3.பல்துலக்குவது
4.மணம் புரிவது.

அ:அபூ ஐயூப்(ரலி)
ஆ:திர்மிதி

ஏழு செயல்கள் ஏற்படுமுன் நீங்கள் நற் செயலில் ஈடு பட்டு விடுங்கள்.
1.இறை நன்றியை மறக்கடித்து விடும் ஏழ்மை.
2.அநியாத்திற்கு உதவும் செல்வம்.
3.உடல் நலத்தைக்கெடுக்கும் நோய்
4.முதுமையில் ஏற்படும் இயலாமை
5.எதிர்பாராமல் ஏற்படும் இறப்பு.
6.தஜ்ஜாலின் வருகை
7.திடுக்கம் அளிக்கவல்ல மறுமை.

அ:அபூ ஹுரைரா
ஆ:முஸ்லிம்

நாண்கு விஷயங்களை நம்பாதவன் உண்மை விசுவாசி அல்ல
1.தையிப் கலிமாவை உறுதி பேணல்
2.இறப்பை நம்புதல்
3மறுமையை நம்புதல்
4.விதியை நம்புதல்

அ:அலி (ரலி)
ஆ:திர்மிதி

இறை நம்பிக்கையாளர்களிடம் இருக்காத இரு செயல்கள்
1.உலோபத்தனம்
2.கஞ்சத்தனம்

அ:அபூ ஸயீதில் குத்ரிய்யீ
ஆ:திர்மிதி

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளை இட்ட 10 விஷயங்கள்.
1.மறைவாகவும்,வெளிப்படையாகவும் இறைவனுக்கு அஞ்சுதல்
2.சினத்திலும்,திருப்தியிலும் நீதத்தை கடை பிடித்தல்.
3.ஏழ்மையிலும்,செல்வத்திலும் நடுநிலையாக இருத்தல்
4.உறவை அறுத்துக்கொள்பவருடன் வலிய சென்று உறவாடுதல்
5.யாதும் அளிக்காதவருக்கும் சன்மானம் அளித்தல்
6.அநீதி இழைத்தவரை மன்னித்தல்.
7.மவுனம்(சிந்திப்பதாகவும்)
8.பேச்சு(தியானமாகவும்,
9பார்வை(அறிவு பெறுவதாகவும்)
10.நன்மையைக்கொண்டு ஏவுதல்

அ:அபூ ஹுரைரா
ஆ:ரஜீன்

Tuesday, September 21, 2010

இஸ்லாம்,இறைதூதர் பற்றி அறிஞர்கள்:
இறைவன் ஒருவன் தான் என்பதனை எள்ளளவும் குழப்பமின்றி உறுதியாக ஊர்ஜிதப்படுத்தியது இஸ்லாத்தின் முதற்பணி.மக்களிடையே சகோதரத்துவத்தை வாழ்க்கையில் நடத்திக்காட்டியது இஸ்லாத்தின் இரண்டாவது பணி.
-மகாத்மா காந்தி

தத்துவக்காட்டில் சிக்கித்தடுமாறிக்கொண்டிருக்கும் உலகுக்கு தக்கதோர் வழிகாட்டும் ஒளி விளக்காக நாங்கள் இஸ்லாத்தை கருதுகின்றோம்.
-அறிஞர் அண்ணா

ஒளிவிடும் வைரத்திற்கு ஒப்பாகவே நாயகம்(சல்)அவர்களின் கருத்துரைகள் உள்ளன.வைரத்தை உயர்ந்த அணிகலணாகவும் பவிக்கலாம்.அதை விற்று குதிரை பந்தயத்திற்கும் போகலாம்.அதை தவறாக பயன் படுத்தி அழிவையும் தேடலாம்.அது போலவே மார்க்கத்தைப்பயன் படுத்துவதைப்பொறுத்தே அதன் மாண்பு இருக்கின்றது.
-அறிஞர் அண்ணா.

இஸ்லாத்திற்கு நன்மை அன்பு என்ற ஆயுதத்தினாலேயே கிடைக்க முடியுமே தவிர கொடுங்கோன்மை என்னும் வாளினால் அல்ல.
-பாபர்

எல்லா தீர்க்கதரிசிகளையும்,மதத்தலைவர்களையும் விட மகத்தான வெற்றி பெற்ற மனிதர் முஹம்மத்(ஸல்)
-என்ஸைக்ளோபீடியா பிரிட்டாணிகா

முஹம்மத் தன் சொந்த வாழ்வில் சுமூக தன்மையும்,விசுவாசமும்,குடுமப்த்தின் பால் பரிவும்,மன்னிக்கும் குணமும் உடையவராக இருந்தார்.அவர் அதிகாரத்தின் உச்ச நிலையில் இருக்கும் போது கூட மிக எளிய வாழ்வை மேற்கொண்டார்.
-சேம்பர்ஸ் என்ஸைக்ளோபீடியா

ஒரு மனிதரின் வார்த்தைக்கு மக்கள் அளிக்கும் மதிப்பில்த்தான் அவருடைய பெருமை எல்லாம் அடங்கி இருப்பதென்றால் இந்த வகையில் உலகில் தோன்றிய மனிதருள் முஹம்மத்(ஸல்) மிக உயர்ந்தவர்.
-லண்டன் 'டெய்லி எக்ஸ்பிரஸ்'

Sunday, September 19, 2010

ராபியத்துல் பஸ்ரியா(ரஹ்) வின் இபாதத்பஸ்ரா நகரைச்சேர்ந்த ராபியத்துல் பஸ்ரியா என்ற இறைபக்தி மிக்க பெண்மணி .இவர் கனவிலும்,நனவிலும் ஹக்கனைப்பற்றிய சிந்தனையில் மட்டும் காலம் கழித்த முஹாஜிர்.ஒரு நாள் இவரிடம் மற்று மொரு இறைநேசசெல்வரான ஹஸன் பஸ்ரி(ரஹ்) என்பவர் சந்தித்தார்.ஆன்மீக நெறி பற்றி இரு இறைநேசர்களும் அளவளாவினார்கள்.

பேச்சினூடே"பஸ்ரியா,நீ சைத்தானை விரும்புகின்றாயா?"என்று கேட்டார்.
"இல்லை"என்றார் பஸ்ரியா.
"நீ சைத்தானை வெறுக்கின்றாயா?" என்று ஹஸன் பஸ்ரி கேட்ட கேள்விக்கும் "இல்லை"என்ற பதிலையே அளித்தார் பஸ்ரியா.

"விரும்பவும் இல்லை,வெறுக்கவும் இல்லை.என்ன இது முன்னுக்கு பின் முரணாக இருக்கின்றது உனது பதில்?விளக்கமாக சொல்"என்றார் ஹசன் பஸ்ரி.

"அல்லாஹ்வின் அன்பரே!என்னுள்ளம் இறைவன் வாழும் இல்லம்.அவ்வில்லம் முழுவதும் அல்லாஹ் மட்டுமே நிறைந்து இருக்கின்றான்.ஒரு சின்னஞ்சிறு இடைவெளி இன்றி அகம் முழுதும் அல்லாஹ் ஒருவனே என் அகத்தை ஆட்சி புரிகின்றான்.அப்படி இருக்க சைத்தானை விரும்பவோ,வெறுக்கவோ என் மனதில் எங்கே இடம் உள்ளது?"
பஸ்ரியாவின் பதில் கேட்டு மலைத்து நின்றார் ஹசன் பஸ்ரி(ரஹ்) அவர்கள்.

இறைநேச செல்வியான ராபியத்துல் பஸ்ரியா பஸ்ரியாவின் இறைபக்தியின் சிறப்புகளை,அவரது வாழ்க்கை வரலாறை இனி வரும் இடுகைகளில் பார்ப்போம்

Saturday, September 18, 2010

எழிலரசர் யூசுப் (அலை)

யூசுப் (அலை)அவர்களை 18 திர்ஹங்களுக்கு மாலிக் என்பவரிடம் யூசுப் (அலை) அவர்களின் சகோதரர்கள் விற்றதும் ,மாலிக், யூசுப் (அலை) அவர்களை ஏலம் விட்டார்.எழிலரசர் யூசுப் (அலை)அ வர்களின் அழகுத்திருவதனம் கண்ட மக்களில் பெரிய பெரிய செல்வந்தர்கள் அவரை விலைக்கு வாங்கி தனதாக்கிக்கொள்ள துடித்தனர்.ஏலம் நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு கூன் கிழவி கம்பூண்றிக்கொண்டு வந்து ,தள்ளாடியவாறே தாம் நூற்ற நூல்கற்றைககளைக்காட்டி"தம்பிகளா!இந்த நூல் கற்றைகளை எடுத்துக்கொண்டு இப்பேரெழிலரசரை தாரும்!" என்று இயம்பினாள்.

அதனைக்கேட்ட சுற்றி இருந்தவர்கள் ஏளனமாக நகைத்தனர்"கிழவியே!எழில் உருவான யூசுபை தனதாக்கிக்கொள்ள செல்வந்தர்களே தம் பணபலத்தால் கடும் போட்டி போட்டு வருகின்றனர். இந்நூல்கண்டுக்கு இவர் கிடைப்பாரா?"என்று வினவினார்கள்.

அதனை செவியுற்ற கிழவி"இந்நூல்கண்டுகளுக்கு இவரது கால்தூசுகூட பெறாது என்பது எனக்குத்தெரியும்.வரலாற்றில் இப்பெரும் எழிலரசரை விலைக்கு கேட்டு வந்தேன் என்று பதியப்படவேண்டும்.அந்த புண்ணியமாவது எனக்கு கிடைக்கட்டும்" என்று இயம்பினாள்.

நபி யூசுப் (அலை) அவர்களின் பேரெழிலை புகழ்ந்த பாடப்பட்ட கவி:

இன்னனமே செந்நிறத்துச்
செம்மல் இவர் போழ்தில்

மன்னவனோ விண்ணவனோ
என்று பலர் மயங்க

மன்னவனே மண்ணதனை
ஆள்வதற்கே வந்த

மன் பெரிய மன்னவனே
என்று பலர் சொல்வர்

இன்னவரை ஈன்றெடுக்க
இருவருமே என்ன

பன்னரிய பெருந்தவமே
பண்ணினரோ என்பர்

அன்று;அன்று;இவர் மணக்கும்
அழகரசி எவளோ

அண்ணவளே அருந்தவமே
ஆற்றியவள் என்பர்

இன்னவனை மணந்திடற்கு
என்ன தவம் செய்வோம்

என்றெண்ணி ஏந்திழையார்
ஏங்கி,ஏங்கி நின்றர்

இன்னவனை போல ஒரு
எழில் மகனை பெறவே

என்ன தவம் செய்திடுவோம்
எனப்பலரும் நினைத்தர்

அளவற்ற அருளாளான்,நிகரற்ற அன்புடையோன்.


அர்ரஹ்மான் னிர்ரஹீம் - அளவற்ற அருளாளான்,நிகரற்ற அன்புடையோன்.

பல்க் நாட்டின் சிம்மாசனத்தில் ஆட்சி புரிந்துவந்த அரசர் இப்றாஹீம் பின் அத்ஹம் அவர்களின் ஞானப்பாதையில் ஓர் நாள்...

கடும்பசி,தாகத்தோடு ஒரு காட்டில் நடந்து வந்தனர்.களைத்த அரசர் ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தனர்.தன் சட்டைப்பையிலிருந்த ஒரு காய்ந்து போன ரொட்டித்துண்டை எடுத்து புசிக்க ஆரம்பித்த வேலையில் எங்கிருந்தோ ஒரு காகம் வந்து ரொட்டியை பறித்துக்கொண்டு பறந்தது.

அத்ஹம் அக்காகத்தை தொடர்ந்து சென்றனர்.இறுதியாக அக்காகம் ஒரு மலையுச்சிக்கு சென்று அங்கிருந்த பாழடைந்த மண்டபத்தின் மேல் தளத்திற்கு சென்று அமர்ந்தது.காகத்தின் செயலை அறியும் நோக்கோடு அதையே குறிப்பாக கவனித்தனர்.

அக்காகம் ரொட்டித்துண்டுகளை காலில் வைத்து தன் அலகால் விண்டு விண்டு கீழே போட்டது.இதனைக்கண்ட அத்ஹம் 'இது என்ன விநோதக்காட்சி?இக்காகம் ரொட்டியை சாப்பிடாமல் கீழே போடுகின்றது?' என்று ஆச்சரியப்பட்ட அரசர் அந்த மண்டபத்தினுள் நுழைந்தனர்.அங்கே அவர் கண்ட காட்சி....

மண்டபத்தினுள் நலிந்து மெலிந்து போன ஒரு மனிதர் கை கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் இருந்தார்.அவர் அந்நிலையில் இருந்தவாறே மேல் நோக்கி வாயைப்பிளக்க அக்காகம் ரொட்டித்துண்டங்களை ஒவ்வொன்றாக அவரது வாய்க்கு நேராக போட அதனை அம்மனிதர் மென்று சாப்பிட்டார்.பிறகு எங்கிருந்தோ அந்த காகம் ஒரு கொட்டாங்கச்சியில் நீரை முகர்ந்து எடுத்து வந்து அதே போல் அவரது வாய்க்கு நேராக ஊற்ற அம்மனிதர் அதனை பருகினார்.

அந்த விந்தை நிகழ்சியால் நெகிழ்ந்து நின்ற அத்ஹம் அம்மனிதரை நெருங்கி கட்டுக்களை அவிழ்த்து"நீங்கள் யார்?இந்த மண்டபத்தினுள் எப்படி வந்தீர்கள்?" என்று வினவினர்.

"நான் ஒரு வியாபாரி.வியாபாரத்தை முடித்து விட்டு பெரும் பொருளுடன் எங்களூருக்கு இக்காட்டினை கடந்து வந்த பொழுது திருடர்கள் என் பொருளையும்,குதிரையையும் பறித்துக்கொண்டு என்னை சங்கிலியால் கட்டிவைத்து விட்டு சென்றுவிட்டனர்.நான் இப்படியே பல ஆண்டுகளாக இருந்து வருகின்றேன்.இது நாள் வரை இக்காகம் தான் எனக்கு இப்படி ஏதாகிலும் உணவை தவறாது கொண்டுவந்து கொடுக்கும்"என்றார்.

இதனைக்கேட்ட அத்ஹம் மட்டில்லா விநோதம் கொண்டார்."இறைவன் எத்தனை பெரும் அருளாளான்.நான் திக்குத்தெரியாத இக்காட்டில் தணியாத தாகத்தோடு தனித்து இருந்த பொழுது உண்ண உணவின்றி பசிக்கொடுமையால் உடல் சோர்ந்த நிலையில் ஒரு மரத்தடியில் அமர்ந்தேன்.அப்பொழுது என் உள்ளம் "ஓ..இப்றாஹீம் பின் அத்ஹம் என்ற அரசரே!உன் பதவி என்ன?பட்டமென்ன?சுகபோகமென்ன?அத்தனையும் துறந்து விட்டு ஆனந்த வாழ்வை இழந்து விட்டு இந்த திக்கு தெரியாத கானகத்தில் இப்படி எல்லாம் இன்னல் படுகின்றாயே?இங்கே யார் உன்னை கவனிப்பார்கள்?"என்ற எண்ணம் எழுந்து என்னை ஏங்க வைத்தது.இத்தகைய மனப்போராட்டத்துடன் என்னிடம் இருந்த ஒரே ஒரு ரொட்டித்துண்டை புசிக்க முற்பட்ட பொழுதுதான் இவை அத்தனை விநோதங்களும் நடந்தன."என்று கூறி அத்தனையையும் அம்மனிதரிடம் விளக்கினார்.

மேலும் கூறினார்."இறைவன்,என் இதயத்திற்கு நேரிய தெளிவான பதிலை சீரிய முறையில் நயம் பட விளக்கி உள்ளான் .அனைத்துயிரையும் படைத்துக்காக்கும் அருளாளன் எந்த உயிருக்கும் எந்த நேரத்திலும்,எந்த வகையிலாவது இரணம் அளிப்பான்."என்று கூறிய இப்றாஹீம்பின் அத்ஹம் இறைவனின் அருளை எண்ணி மெய்சிலிர்த்தார்.

எதற்கும் சக்தியற்று, உழைக்க வசதியற்ற வக்கற்றவர்களாக தாயின் வயிற்றில் இருந்து பிறந்தோம்! வாழ்க்கையைக் கொடுத்தான்! வசதிவாய்ப்புகளைக் கொடுத்தான் தாயைக் கொடுத்தான், வாழ்க்கைத்துணையை கொடுத்தான் பிள்ளைச் செல்வத்தை கொடுத்தான், நம்மை நேர்வழிப்படுத்த அருள்மறைக் குர்ஆனையும் நல்வழிப்படுத்த அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளான ஹதீதுகளையும் நமக்கு இலவசமாக அருளினானே இந்த அன்பிற்கு நிகராக வேறு ஏதாவது அன்பு உள்ளதா? இந்த அருளுக்கு நிகரான அருள் உலகில் ஏதாவது உள்ளதா? சிந்தித்துப்பார்ப்போம். அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் உணர்ந்து அவனுக்கு அஞ்சிவாழும் மூமின்களாக உறுதியுடன் இருப்போம்! நம் அனைவர் மீதும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!