Saturday, November 27, 2010

அரபிப் பதத்தின் விளக்கம் - 3


23.மகாமு மஹ்மூத் - புகழப்படும் அந்தஸ்த்து என்று பொருள்.மறுமையில் நீதி விசாரணைக்கு முன்பு மக்கள் வேதனையால் துன்புறும் பொழுது அதிலிருந்து அவர்களைக்காப்பாற்றும் பொருட்டு அல்லாஹ்வின் பரிந்துரை செய்யும் மிகப்பெரிய அந்தஸ்த்தை நபி (ஸல்)அவர்களுக்கே மட்டும் அல்லாஹ் வழங்குவான்.

24.மிஸ்ர் - இதன் சொற்பொருள் பட்டணம் என்பதாகும்.இஸ்லாமிய வழக்கில் இறைத்தூதர் மூஸா (அலை )அவர்கள் பிறந்த எகிப்து நாட்டினை குறிக்கும்.

25.முஸ்தலிஃபா - மக்காவிலுள்ள மினாவுக்கும் அரபாத்துக்கும் இடையில் உள்ள ஓர் இடமாகும்.ஹாஜிகள் அரஃபாவில் இருந்து வந்து முஸ்தலிஃபாவில் ஓர் இரவு தங்குவது ஹஜ்ஜின் கடமைகளுள் ஒன்றாகும்.

26.முஹர்ரம் - இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும்.

27.முஹாஜிர் - இதன் பொருள் இறைப் பொருத்தத்திற்காக இடம் பெயர்வோர் என்பதாகும்.அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் மக்காவில் இருந்து மதீனாவுக்கு கிளம்பியவர்கள் முஹாஜிரீன்கள் எனப்படுவர்.ஓரிறையை நிராகரிக்கும் ஆட்சியிலிருந்து தம்முடைய இறை நம்பிக்கையை காத்துக்கொள்ளவும்,இறைவன் தடுத்துள்ளதை விட்டும் தன் ஆத்மாவை காத்துகொள்ளவும் இடம் பெயர்பவர்களை முஹாஜிரீன்கள் எனக்கருதப்படுவர்.இறை மார்க்கத்தை பின்பற்றிட தடைகள் ஏற்படும் பொழுது தம் தாய் நாட்டை துறந்து வேற்றிடம் செல்பவர் என்றும் பொருள் கொள்ளலாம்.

28.யஸ்ரிப் - பெருமானார் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்துக்கு முன்பு மதீனாவின் பெயர் யஸ்ரிப் ஆகும்.எனவே இது மதீனாவின் பழைய பெயர் என்றும் கொள்ளலாம்.

29.ரமளான் - இஸ்லாமிய மாதங்களின் வரிசையில் இது ஒன்பதாவது மாதமாகும்.இம்மாதத்தில்தான் ஐம்பெரும் கடமைகளில் நான்காவது கடமையான நோன்பு நோற்கப்படுகின்றது.குர் ஆனில் குறிப்பிடப்படும் ஒரே மாதத்தின் பெயரும் இதுதான்.குர் ஆன் முதன் முதலாக பூமியில் இறங்கிய இரவும் இந்த மாதத்தில்த்தான் உள்ளது.

30.ரலி - ரலி என்பது ரலியல்லாஹு அன்ஹு என்றும் கருதலாம்.
இதன் பொருள் அல்லாஹ் அவரைப்பொருதிக்கொள்வானாக! என்பதாகும்.இது நபித் தோழர்களின் பெயருக்குப்பின்னால் சொல்லப்படுபவை.

31.ரஹ் - இது ரஹ்மதுல்லாஹி அலைஹி என்பதின் சுருக்கமாகும்.இதன் பொருள் அல்லாஹ்வின் அருள் அவர் மீது உண்டாவதாக என்பதாகும்.இது நபித்தோழர்களுக்கு பிறகு வந்த நல்லடியார்களின் பெயர்கள் சொல்லப்படும் பொழுது உபயோகப்படுத்தப்படும்.

32.வஹீ - அறிபவரையும்,அறிவிக்கப்படுபவரையும் தவிர மற்றவர் அறிய முடியாத வண்ணம் விரைவாக செய்தி அறிவிப்பது,இதயத்தில் உதிப்பைத்தோற்றுவிப்பது என்பது பொருளாகும்.இஸ்லாமிய மொழி மரபில் வஹீ என்பது இறைவன் மனிதர்களில் இருந்து யாரை நபியாக தேர்வு செய்கின்றானோ அவருக்கு தன்னுடைய செய்திகளை அறிவிப்பதாகும்.வானவர் மூலம் இறைத்தூதர்களுக்கு இறைவனால் அனுப்பப்படும் இறைச்செய்தி.

33.ஸல் - ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்ற பிரார்த்தனையின் சுருக்கமே இது இறைவனின் கருணையும் அமைதியும் உண்டாவதாக!என்பதே இதன் பொருள்.நாயகம் ஸல் அவர்களின் பெயர் உச்சரிக்கபடும் குறிப்பிடப்படும் போதெல்லாம் இதனை சொல்வது முஸ்லிம்களின் கடமையாகும்.இதனை சலவாத் என்பர்,

34.ஸலாம் - இது அஸ்ஸலாமு அலைக்கும் என்பதை குறிப்பதாகும்.இதன் பொருள் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக என்பதாகும்.இது உலக முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் அளித்துக்கொள்ளும் முகமனும் வாழ்த்தும் ஆகும்.

35.ஸுன்னத் - இதன் பொருள் வழி முறை என்பதாகும்.அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பழக்க வழக்கங்கள் நடைமுறைகள்,மேலும் அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகள் ஆகியவையே ஸுன்னத் ஆகும்.

36ஸுஜூது - இது தலையை தரையில் வைத்துப்பணிதல் என்பதனினைக்குறிக்கும்.இது இறைவனுக்காக மட்டுமே செய்யபட வேண்டுமே அன்றி வேறு எதற்கும் எவருக்கும் செய்யக்கூடாது என்று இஸ்லாம் பணிகின்றது.

37.ஜிப்ரீல்(அலை) - இறைவனுக்கு நெருக்கமான நாண்கு வானவர்களுள் இவரும் ஒருவர்.வானவர்களின் தலைவரும் இவரே.இவர்கள்தான் இறைத்தூதர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) கொண்டு வந்த வானவர்.



Saturday, November 20, 2010

இறைத்தூதர்கள்(சிறு குறிப்பு) - 2

13.ஸுஐபு(அலை): இவர்கள் நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் வழித்தொன்றல்.வடமேற்கு சவூதியாவில் உள்ள மலைபிரதேசமான "மத்யன்"பகுதிக்கும்"அய்கா"என்னும் மற்றுமொரு பகுதிக்கும் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.ஓரிறைக் கொள்கையையும்,வணிகநேர்மையையும் மக்களுக்கு வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார்கள்.

14.மூஸா(அலை) இவர்கள் கி.மு 14ஆம் நூற்றாண்டில் எகிப்தில் பிறந்தனர்.கொடுங்கோலன் இரண்டாம் ரம்சேஸ்(பிர் அவ்ன்)கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட இஸ்ராயீல் சமுதாயத்தை மீட்டார்கள்.இவர்களுக்கு அல்லாஹ் "தவ்ராத்" வேதத்தை அருளினான்.

15.ஹாரூன் (அலை):இறைத்தூதர் மூஸா(அலை) அவர்களின் சகோதரர்.எகிப்தின் சர்வாதிகாரி இரண்டாம் ரம்சேஸை எதிர்த்துப் போரடுவதில் மூஸா (அலை) அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

16.இல்யாஸ்(அலை): கி மு 8ஆம் நூற்றாண்டு நபி ஹாரூன் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் வந்த ஒரு இறைத்தூதர்.அன்றைய ஷாம் நாட்டு மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.

17.யூனுஸ்(அலை): கி.மு 8ஆம் நூற்றாண்டில் ,இராக்கிலுள்ள "நைனவா" பகுதிக்கு இவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.

18.தாவூத்(அலை): இறைத்தூதர் யஃகூப்(அலை) அவர்களின் வழித்தோன்றல் ஆவார்கள்.இவர்களுக்கு "ஜபூர்" என்னும் வேதத்தை அல்லாஹ் அருளினான்.இவர்கள் பாலஸ்தீன சர்வாதிகாரியான ஜாலூதை வீழ்த்தினார்கள்.

19.சுலைமான்(அலை): இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களின் மைந்தரான இவர்கள் இறைத்தூதராகவும்,பேரரசராகவும்,விளங்கினார்கள்.ஜெரூசலத்திலுள்ள புனித இறை இல்லமான பைத்துல் முகத்தஸை இறைக்கட்டளைக்கு இணங்க புதுப்பித்தார்கள்.ஜின் இனமும்,பறவை இனமும் இவர்களுக்கு வசப்படுத்திக்கொடுக்கப்பட்டிருந்தன.

20.ஜகரிய்யா(அலை): கி.மு முதலாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் இஸ்ரவேலர்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.இறைத்தூதர் தாவூத்(அலை) அவர்களின் வழித்தோன்றலான இவர்கள் அன்னை மர்யமை வளர்த்தார்கள்.இறைத்தூதர் யஹ்யா(அலை) அவர்கள் இவர்களின் புதல்வர் ஆவார்கள்.

21.யஹ்யா(அலை): கி.மு முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்கள் ஜக்கரிய்யா(அலை) அவர்களின் புதல்வர்.இவரை இஸ்ரவேலர்கள் படுகொலை செய்தனர்.

22.ஈஸா(அலை): இவர் கி.மு 4ஆம் ஆண்டில் பாலஸ்தீனத்தில் உள்ள நாஸிரா என்னும் ஊரில் மர்யம்(அலை) அவர்களுக்கு ஆண் துணையின்றி அற்புதமான முறையில் பிறந்தார்கள்.இவருக்கு இஞ்ஜீல் வேதம் இறைவனால் அருளப்பட்டது.

23.துல்கிஃப்லு(அலை):இறைத்தூதர்.

24.அல்யஸவு(அலை): இறைத்தூதர்.

25.முஹம்மது(ஸல்): இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் ரபியுல் அவ்வல் மாதம் பிறை 12(கி.பி 570 ஆகஸ்ட் 20) திங்கள்கிழமை திருமக்காவில் பிறந்தார்கள்.இப்புவியில் 63ஆண்டு காலங்கள் வாழ்ந்து ஹிஜ்ரி 11ஆம் ஆண்டு ரபியுல் அவ்வல் மாதம் 12ஆம் நாள் (கி.பி 632 ஜூன் 7)திங்கள் கிழமை இவ்வுலகை விட்டு மறைந்தார்கள்.



Monday, November 8, 2010

இறைத்தூதர்கள்(சிறு குறிப்பு) - 1

குர்ஆனில் குறிப்பிடப்பட்ட இறைத்தூதர்கள்(சிறு குறிப்பு)

1.ஆதம் (அலை):உலகில் முதன்முதலாக படைக்கப்பட்ட மனிதர்.இந்த உலகிற்கு இறைவனால் அனுப்பபட்ட முதல் இறைத்தூதர்.

2.இத்ரீஸ்(அலை):இறைத்தூதர் நூஹ்(அலை)அவர்களின் முப்பாட்டனாரான இவர்கள் இறைத்தூதர் ஆதம் - ஹூத் அவர்களுக்குப்பின்னால் வந்த நபியாவார்.

3.நூஹ்(அலை):ஆதித்தந்தை ஆதம் (அலை) அவர்களுக்குப்பின் வந்த இறைத்தூதர்.இவர்கள் 950ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.இவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரளயம் மிகப்பிரமாண்டமானது.

4.ஹூத்(அலை):கி.மு 2000 இல் வாழ்ந்த அரபு பழங்குடியின மக்களுக்கு இவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.இப்பழங்குடி மக்கள் யமன் நாட்டில் கடலோரப்பகுதிகளில் வசித்து வந்தனர்.

5.ஸாலிஹ் (அலை):இவர்கள் கி.மு 2430 இல் சவுதிய்யாவிலுள்ள அல்ஹிஜ்ர் என்னும் இடத்தில் வாழ்ந்த இறைத்தூதர்.ஆடம்பர வாழ்வில் மூழ்கி,சிலைவணக்கத்தில் மாய்ந்து போய்க்கொண்டிருந்த "ஸமூத்"கூட்டத்தினரை சீர்படுத்த பாடுபட்டார்கள்.

6.இப்றாஹீம்(அலை):இவர்கள் கி.மு 2000 வாக்கில் தென் இராக்கில் உள்ள "உர்"என்னும் ஊரில் பிறந்த இறைத்தூதர் ஆவார்கள்.இவர்களுக்கு "இறை நம்பிக்கையாளர்களின் தந்தை" எனவும்,"இறைவனின் உற்ற நண்பர்" எனவும் சிறப்பு பெயர்கள் உண்டு.இறை ஆணைப்படி கஃபா ஆலயத்தை தன் மகனோடு சேர்ந்து புனர் நிர்மாணம் செய்தார்கள்.

7.லூத் (அலை):நபி இப்றாஹீம்(அலை)அவர்களின் சகோதரர் மகனான இவர்கள் ஜோர்தானில் உள்ள "ஸத்தூம்"என்னும் பகுதிக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள்.ஓரினசேர்க்கையை எதிர்த்து பிரச்சாரம் செய்தவர்கள்.

8.இஸ்மாயீல்(அலை): கி.மு 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இறைத்தூதரான இவர்கள் நபி இப்றாஹீம் - ஹாஜரா தம்பதிகளுக்கு மூத்த புதல்வராவார்கள்.இவர்களிடம் இருந்து அரபு சந்ததிகள் தோன்றியதால் "அரபிகளின் தந்தை" என்பர்.

9.இஸ்ஹாக்(அலை): இறைத்தூதரான இவர்கள் நபி இப்றாஹீம் - ஹாஜரா தம்பதிகளின் இளைய புதல்வராவார்கள்.இவரின் மைந்தர்தான் யகூஃப் (அலை) அவர்கள்.எனவேதான் இவர்களை "இஸ்ராயீல்களின் தந்தை"என்று சொல்வர்.

10.யஃகூப்(அலை): கி.மு 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்கள் இறைத்தூதர் இஸ்ஹாக்(அலை) அவர்களின் புதல்வர்.இவர்களுக்கு 12 ஆண் பிள்ளைகள் இருந்தனர்.இந்த 12 பேரின் வழித்தோன்றல்களே இஸ்ராயீல் சமூகத்தினர்.யஃகூப் (அலை) அவர்களின் மற்றுமொரு பெயரே இஸ்ராயீல்.இதனால் இஸ்ரவேலர்களை பனீ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் மக்கள் என்பர்.

11.யூசுப்(அலை): யஃகூப் (அலை) அவர்களின் இளைய புதல்வரான இவர்கள் கி.மு 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் பேரழகுக்கு சொந்தக்காரர்.இவர்கள் எகிப்தின் அமைச்சராகவும்,பின்னர் அரசராகவும் விளங்கினார்கள்.

12.ஐயூப்(அலை): நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் வந்தவர்.நபி யூசுப்(அலை) அவர்களுக்குப்பின் ,தென் பாலஸ்தீனுக்கும் "அல் அகபா"வளைகுடாவுக்கும் மத்தியில் "அத்வம்"பகுதி மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்கள் என்று சொல்லப்படுகின்றது.இவர்கள் பொறுமைக்கு பெயர் போனவர்கள்.

அரபிப் பதத்தின் விளக்கம் - 2


அரபிப் பதத்தின் விளக்கம் - 2

11.கலிமா - இதன் பொருள் சொல்,வார்த்தை,பேச்சு என்பதாகும்.இஸ்லாத்தின் அடிப்படை தத்துவங்களை கூறும் வசனங்களுக்கு கலிமா என்று கூறப்படுகிறது.'லாயிலாஹா இல்லல்லாஹ் - முஹம்மது ரசூலுல்லாஹ்(வணக்கத்துக்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை-முஹம்மது(ஸல்)அவர்கள் இறைவனின் தூதர்)எனும் இஸ்லாமின் மூலக்கொள்கையை இச்சொல் குறிக்கும்.

12.தயம்மும் - இச்சொல்லுக்கு நாடுதல் என்று பொருள்.உளு செய்வதற்கு நீர் கிடைக்காத பொழுது மண்ணைக்கொண்டு சுத்தி செய்து கொள்ள நாடுவதைக் குறிப்பிட இச்சொல் பயன் படுத்தப்படுகின்றது.'உளு' எனும் அங்கசுத்தி செய்ய நீர் கிடைக்காத சமயத்தில் சுத்தமான மண் உள்ள தரையில் கைகளைப் பதித்து முகம் ,கைகளில் தடவிக்கொள்வது.

13.தவாஃப் - புனித மக்காவில் உள்ள திருகஃபாவை ஏழுதடவை சுற்றி வருவதற்கு தவாஃப் என்று பெயர்.முஸ்லிம்கள் கஃபாவைத் தவிர வேறு எதனையும் சுற்றி வருதல் கூடாது.ஹஜ்ஜிலும்,உம்ராவிலும் இது முக்கிய வழிபாடாகும்.

14.துஆ - இதன் பொருள் இறைஞ்சுதல்,பிரார்தித்தல் என்று பெயர்.அழைப்பு என்பது சொற் பொருளாகும்.

15.நபி - நுபு எனும் மூலச்சொல்லில் இருந்து வந்த இதன் பொருள் உயர்த்தப்பட்டவர் என்பதாகும்.இறைவனிடமிருந்து செய்திகளை 'வஹீ' மூலம் எடுத்துக்கூறும் தூதர்களுக்கு கூறப்படுகின்றது.நபித்துவத்திற்கு 'நுபுவத்'என்று பெயர். எல்லா நபிமார்ளும் இறைவனால் அனுப்பப்பட்டவர்களே. மக்களுக்கு இறை செய்திகளை எடுத்துரைத்து அவர்களுக்கு நேர்வழிக்காட்டுவதற்காக மக்களில் இருந்தே இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே இறைத்தூதர்.

16.பக்கா - இது புனித மக்காவின் பழைய பெயராகும்.

17.மக்கா - இஸ்லாத்தின் புண்ணிய நகராமான இது சவூதி அரேபியாவில் உள்ள ஹிஜாஸ் மாநிலத்தில் செங்கடலில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ளது.இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் இறை ஆணைப்படி இங்கு புனித கஃபாவை நிர்மாணித்தார்கள்.இஸ்லாத்தில் இறுதித்தூதர் முஹம்மத் நபி(ஸல்) இப்புனித பூமியில் அவதரித்தார்கள்.

18.மகாமு இப்ராஹீம் -நபி இப்றாஹீ(அலை) அவர்கள் கஃபாவை நிர்மாணிக்கும் பொழுது ஒரு கல்லில் மீது நின்றுகொண்டிருந்தார்கள்.அதில் அவரது பாதங்கள் இரண்டும் பதிந்திருந்தன.இக்கல் இருந்த இடமே மகாமு இப்றாஹீம்.

19.மத்ரஸா - இதன் பொருள் கல்வி போதிக்கப்படும் இடம் என்பதாகும்.பொதுவாக மார்க்க கல்வி போதிக்கப்படும் கல்லூரிகளை த்ரஸா என்று குறிப்பிடுவர்.

20.மதீனா - இதன் பொருள் பட்டணம்,நகரம் என்பதாகும்.இது சவூதி அரேபியாவில் உள்ள ஹிஜாஸ்மாநிலத்தில் புனித மக்காவிற்கு வடக்கே 320 மைல் தொலைவில் உள்ள இஸ்லத்தின் புண்ணிய நகரங்களுள் ஒன்று.இங்கேதான் அண்ணல் நபி(ஸல்) அவர்களுடைய,அவர்களது தோழர்களுடைய,இன்னும் பலருடைய அடக்கஸ்தலங்கள் உள்ளன.

21.மஸ்ஜித் - சுஜூத் என்னு சொல்லில் இருந்து பிறந்த இதன் பொருள் தொழுமிடம் என்பதாகும்.இந்தியாவில் முதன் முதல் கட்டப்பட்ட மஸ்ஜித் கி.பி 642 -ல் மாலிக் இப்னு தீனாரால் ,கேரளா மாநிலத்திலுள்ள கொடுங்கலூரில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளி வாசலாகும்.ஐவேளைத்தொழுகைகள் நடத்தப்படும் பள்ளிவாசல்..உலகில் இறைவனை தொழுவதற்காக நிர்மாணிக்கப்பட்ட முதல் தொழுமிடம் புனித 'கஃபா'இஸ்லாமியர் எங்கெங்கு இருந்தார்களோ அங்கங்கு எல்லாம் தொழுமிடங்களை எழுப்பினார்கள்.

22.மஹர் - இஸ்லாமிய சட்டத்தின் படி மணமகன் தான் முடிக்கும் பெண்ணுக்கு கொடுக்கும் திருமணக்கட்டணத்திற்கு இப்பெயர் வழங்கப்படுகின்றது.இதைப்பற்றி அல்குர் ஆனில் "நீங்கள் திருமணம் செய்துகொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்.அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் மனமார உங்களுக்கு விட்டுத்தந்தால் அதனை நீங்கள் தாரளமாக மகிழ்வுடன் புசியுங்கள்."(4:4)என்று இறைவன் கூறுகின்றான்.இதை முஸ்லிம் மணமகன்,மணமகளுக்கு கட்டாயம் செலுத்த வேண்டிய விவாக கட்டணம் என்றும் சொல்லலாம்.
இன்னும் வரும்.

Sunday, November 7, 2010

அரபிப் பதத்தின் விளக்கம் - 1

உலகில் வாழும் அரபி அல்லாத முஸ்லிம்கள் அரபுச்சொற்களை மிக அதிகளவில் உபயோகிக்கின்றனர்.அவற்றுக்கான தமிழ் விளக்கம்.

1.அன்ஸாரிகள் - அன்ஸார் என்பதற்கு உதவியாளர்கள் என்று பொருள்.யமன் நாட்டிலிருந்து மஃரிப் நீர்தேக்கத்தில் கி.பி 542 - 57 இல் உடைப்பு ஏற்பட்ட பொழுது அங்கிருந்து வந்து குடியேறிய அவ்ஸ்.கஜ்ரஜ் ஆகிய இரு பெரும் குலத்தோரே பின்பு அன்ஸாரிகளானார்கள்.மக்காவைத்துறந்து புனித மதீனாவுக்கு வந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை அகமும்,புறமும்மலர வரவேற்ற ஆதரவாளர்கள் அன்ஸாரிகள்.மதீனா வாசிகள் அன்று போல் இன்றும் பண்பாட்டின் சின்னமாக விளங்குகின்றனர்.

2.அரபி - இன்று அரபி மொழி உலகில் பல்வேறு பகுதிகளில் பேசப்படும் மொழிகளில் ஆங்கிலம்,ஸ்பானிஷ் மொழிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப்பெற்றுத் திகழ்கின்றது.உலக மொழி ஆய்வினர் அரபியே உலகின் முதன் மொழி என்று கூறுகின்றனர்.உலகப்பொதுமறை திருகுர் ஆன் இறக்கப்பட்ட மொழி அரபி மொழியே ஆகும்.அரப் என்ற பதத்திற்கு உற்சாகம்,தெளிவான பேச்சு,வெளிப்படையான மொழி எனப் பல பெயர்கள் உண்டு.

3.அர்ரஹ்மான் - அளவற்ற அருளாளன்.இது தூய அல்லாஹ் ஒருவனுக்கே பொருத்தமானது.அல்லாஹ்வின் அழகிய திரு நாமங்களில் ஒன்று.

4.அலை - அலைஹிஸ்ஸலாம் என்பதின் சுருக்கமே அலை.இதன் பொருள் அவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும் என்பதாகும்.இஸ்லாமிய வழக்கில் பெரும்பாலும் நபிமார்களின் பெயர்களை சொல்லப்பட்டவுடன் கூறப்படுவதாகும்.சில சமயம் தூதரல்லாத முன் சென்ற சில நல்லடியார்களுக்கும் சொல்லப்படும்.உதாரணம்:மர்யம்(அலை),லுக்மான்(அலை)

5.இன்ஷா அல்லாஹ் - இவ்வார்த்தைகளின் பொருள் 'அல்லாஹ் நாடினால்' என்பதாகும்.ஒருவர் ஒரு வாக்குறுதியை அது எத்தனை சிறியதாயினும் அதனை அளிக்கும் முன் 'இன்ஷா அல்லாஹ்'கூறின் அவர் அவ்வாக்குறுதியை மனப்பூர்வமாக நிறை வேற்ற கடமைப்பட்டுள்ளார்.

6.இஸ்லாம் - ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து,இறைவன் மனித உற்பத்தியை தொடங்கினான்.மனித குலத்தை நேர்வழிப்படுத்த இறைத்தூதர்களை மனிதர்கள் இடையே அனுப்பி வைத்தான்.எல்லாத்தூதர்களும் ஓரிறைக்கொள்கையை மட்டுமே போதித்தனர்.இந்த ஒரிறைக்கொள்கையின் மார்க்கமே இஸ்லாம்.'இஸ்லாம்'என்ற சொல்லுக்கு (அல்லாஹ்வுக்கு)அடி பணிதல் என்றும்,'முஸ்லிம்' என்ற சொல்லுக்கு (அல்லாஹ்வுக்கு)அடிபணிபவர் என்றும் பொருளாகும்.இறுதித்தூதர் எடுத்துரைத்த ஏக இறை மார்க்கத்தை கடைபிடிப்பதே இஸ்லாமாகும்.

7.இப்லீஸ் - இச்சொல்லுக்கு நிராசையுறுதல் என்று பொருள்.இறைவனின் பேரருளை விட்டும் இப்லீஸ்(ஷைத்தான்)நிராசையுற்று விட்டதால் அவனுக்கு இப்பெயர் ஏற்பட்டது.மனிதனை வழிகெடுப்பதே இவனின் குறிகோளும்,வேலையுமாகும்.இவன் நெருப்பால் படைக்கப்பட்ட ஜின் இனத்தை சேர்ந்தவன் ஆவான்.இறை கட்டளையை ஏற்க மறுத்த காரணத்தினால் இறைவனின் கருணையில் இருந்து நீக்கப்பட்டான்.

8.உம்ரா - நாடுதல்,சந்தித்தல்,வழிபடுதல் என்று பொருளாகும்.கஃபாவுக்கு செல்வது இரு வகைப்படும்.1.ஹஜ் 2.உம்ரா. உம்ராவுக்கு ஹஜ்ஜின் அத்தனை நிபந்தனைகளும் உள்ளன.ஆனால் ஹஜ்ஜை குறிப்பிட்ட காலம் வரைதான் நிறைவேற்ற இயலும்.ஆனால் உம்ராவை எக்காலத்திலும் நிறைவேற்றலாம்.புனித கஃபாவை தரிசித்து இறைவனை வழிபடும் ஒரு வழிபாடு எனவும் பொருள் கொள்ளலாம்.

9.உளூ - தொழுவதற்காக தண்ணீரால் உடலைத் தூய்மை செய்து கொள்வதற்கு 'உளு'எனக்கூறப்படுகின்றது.தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்னால் முகம்,வாய்,மூக்கு,தலை,காது,கால் முதலியவற்றை நபிகளாரின் வழிமுறைகளுக்குட்பட்டு,தூய்மைப்படுத்திக்கொள்ளும் அங்கசுத்தி முறையாகும்.

10.கஃபா - மக்காவில் உள்ள இறை இல்லத்திற்கு கஃபா என கூறப்படுகின்றது.இதன் முழுப்பெயர் கஃபதுல்லாஹ் எனப்படும்.இறைத்தூதர் இப்றாஹீம்(அலை) அவர்களாலும்,அவர்களது திருமகனார் இஸ்மாயீல் (அலை)அவர்களாளும் மக்காவில் எழுப்பப்பட்ட முதல் இறை ஆலயம்.இஸ்லாத்தில் கஃபா சிறப்பான இடத்தை வகிக்கின்றது.உலகில் உள்ள முஸ்லிம்கள் அதனை முன்னோக்கியே இறைவனைத்தொழுகின்றனர்.ஹஜ் கடமை இங்குதான் நிறை வேற்றப்படுகின்றது.இதற்கு 'மஸ்ஜிதுல் ஹராம்' புனித மிக்க பள்ளிவாசல் என்றும் பெயருண்டு.

இன்னும் வரும்.



3 நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கலாகாது.


உம்முஹாத்துல் முஃமினீன் அன்னை உம்மு ஹபீபா(ரலி)அவர்களின் தந்தை அபு சுப்யான் மரணமடைந்த மூன்றாம் நாள் உம்முஹபீபா(ரலி)அவர்கள் நறுமணத்தை வரவழைத்துப்பூசிக்கொண்டார்கள்.தந்தை இறந்த மூன்றாம் நாளே நறுமணம் பூசி சந்தோஷம் சந்தோஷம் கொண்டாடுகின்றாரே என்று அதனைக்கண்டவர்களுக்கு எல்லாம் வியப்பு.காரணம் கேட்ட பொழுது இவ்வாறு விளக்கம் கூறினார்கள்
"எனக்கு நறுமணம் பூசிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் நான் நறுமணத்தை பூசிக்கொள்ள வில்லை.ஒரு பெண்ணுக்கு தன் கணவன் தவிர வேறு எவருக்காகவும் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்க அனுமதி இல்லை என்ற நாயக வாக்கை மெய்பிப்பதற்காக அதனை அனுசரித்து நான் நறுமணம் பூசி,மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கவில்லை என்று காட்ட இவ்வாறு செய்தேன்"என்று கூறினர்.