மினா என்னும் இடத்திலுள்ள குறிப்பிட்ட மூன்று இடங்களுக்கு ஜமராத் எனப்படும்.இம்மூன்று இடங்களும் ஒன்றுக்கொன்று சுமார் அரை பர்லாங் இடை வெளியில் உள்ளன.
நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் தங்கள் தவப்புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வின் ஆணைப்படி இறைவனுக்காக பலியிட அழைத்துச் சென்ற போது இப்லீஸ் நபி இப்றாஹீம்(அலை) அவர்கள் முன் தோன்றி அவர்களின் அந்த தியாகத்தை முறியடிக்க முயன்றான்.அவனை அறிந்து கொண்ட இப்றாஹீம் (அலை)அவர்கள் இப்லீஸ் மீது கல்லெறிந்து அவனை விரட்டினார்கள்.அதன் காரணமாக அம்மூன்று இடங்களிலும் கல் எறிவது வாஜிப் ஆக்கப்பட்டுள்ளது.
மினாவின் கூடாரங்களில் இருந்து போனால் முதலில் வருவது ஜம்ரத்துல் ஊலா என்றும்,அடுத்து வருவது ஜம்ரத்துல் உஸ்தா என்றும்,கடைசியில் உள்ளது ஜம்ரத்துல் அக்பர் என்றும் பெயர் சொல்லப்படுகின்றது.இவற்றை முறையே சிறிய ஷைத்தான்,நடு ஷைத்தான்,பெரிய ஷைத்தான் என்றும் மக்கள் கூறுகின்றனர்.
ஹாஜிகள் கல்லெறியும் போது சில சமயம் நெரிச்சலில் சிக்கி சிலர் இறந்தும் போவார்கள்.இதற்கு காரணம் என்னவென்றால் கல்லெறியுமிடம் சுமார் இருபது அடி அகலத்தில் முற்றிலும் சுவர் எழுப்பப்பட்டு ஒரு தூண் நடுவில் அமைக்கப்பட்டிருந்தது.
இப்பொழுது மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது.பல லட்சம் மக்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் இந்த இடத்தில் ஒன்று கூடுவதால் நெரிச்சல் ஏற்படுகின்றது.எனவே மிகவும் கவனமாக கல்லெறிய வேண்டும்.
இப்பொழுது சவுதி அரசாங்கம் அவ்விடத்தில் இரண்டடுக்கு மேம்பாலங்கள் கட்டி போவதும்,வருவதும் ஒரு வழிப்பாதையாக ஆக்கி வசதிகளை அமைத்துத்தந்துள்ளது.இதனால் ஹாஜிகள் இப்போதெல்லாம் நெரிசலும்,சிரமமும் இல்லாமல் போய் கல்லெறிந்து வருகின்றனர்.