பெருமானார்(ஸல்)அவர்கள் ஸஹாபாக்களில் ஒரு பிரிவினரை போருக்காக தேர்ந்தெடுத்து ,அவர்களில் ஒவ்வொருவருக்கும் தேவையான உணவுப்பொருட்களையும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவ்வீரர்களில் ஒருவரான ஹுதைபா(ரலி)அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்க விடுபட்டுப்போய் விட்டது.படை புறப்பட்டுப்போய் விட்டது.
ஹஜ்ரத் ஜிப்ரீல்(அலை) அவர்கள் பெருமானார்(ஸல்)அவர்கள் முன் தோன்றி "நபியே!திண்ணமாக என் ஹக்கன் என்னை தங்களிடம் அனுப்பி உள்ளான்.உங்களது தோழரகள் அனைவருக்கும் உணவுப்பொருட்கள் கொடுத்தனுப்பிய தாங்கள் ஹுதைருக்கு மட்டும் கொடுக்க மறந்து விட்டீர்கள்.அவர் "ஆகாரங்களில் சிறந்தது யாரப்பி"என்று சொல்லிய வண்ணம் சென்று கொண்டிருக்கின்றார்.மறுமை நாளில் ஹுதைரின் இம்மொழி விண்ணுக்கும் ,மண்ணுக்கும் இடையே பேரொளியாக விளங்கப்போகின்றது.யாரிடமேனும் ஹுதைருக்கு உணவுப்பொருட்களைக்கொடுத்தனுப்பும்படி அல்லாஹ் கூறினான்"என்றனர்.
பெருமானார்(ஸல்)அவர்கள் ஒரு தோழரை அழைத்து ஹுதைருக்கு தேவையான உணவைக்கொடுத்து"ஹுதைரைக்கண்டு இவ்வுணவைக்கொடுத்ததும் ,ரசூலுல்லாஹ் தங்களுக்கு ஸலாம் சொன்னார்கள்.மேலும் உங்களுக்கு உணவுப்பொருளைத்தர மறந்து விட்டார்கள்..திண்ணமாக என் இறைவன் என்னிடம் உங்களைப்பற்றி நினைவூட்ட ஜிப்ரீல்(அலை)அவர்களை அனுப்பி வைத்தான்.அவர் உங்களைப்பற்றி நினைவூட்டியதுடன்,உங்கள் இருப்பிடத்தையும் அறிவித்தார் என்று நான் கூறியதாக கூறுங்கள்"என்று சொல்லி தோழரை ஹுதைரின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
ஹுதைர் சென்ற பாதை நோக்கி விரைந்த அந்தத்தோழர் ஹுதைரை நெருங்கி மேற்கூறியவாறு உரைத்தனர்.இதனைக்கேட்ட ஹுதைர் அல்லாஹ்வைப்புகழ்ந்து,பெருமானார்(ஸல்)அவர்கள் மீது சலவாத்து சொல்லி அகம் மகிழ்ந்தார்.
"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.ஏழு வானங்களுக்கு அப்பாலிருக்கும் அர்ஷுக்கு மேலிருந்தவாறு என்னை என் ஹக்கன் நினைவு கூர்ந்துள்ளான்.என் பசியையும்,சோர்வையும் கண்டு மனமிறங்கிஉள்ளான்.யாரப்பே!ஹுதைரை நீ மறக்காதது போன்று ஹுதைரையும் உன்னை என்றென்றும் மறக்காமல் இருக்கும் இருக்கும்படி செய்வாயாக!"என்று ஹுதைர் இரு கையேந்தி துஆ கேட்டனர்.
இவ்விபரத்தை அத்தோழர் பெருமானார்(ஸல்)அவர்களிடம் சொன்னதும்,பெருமானார் அவர்கள்"ஹுதைர் அவ்வாறு கூறிய தருணத்தில் மட்டும் நீர் வானத்தை பார்த்திருப்பீராயின் அவரது இச்சொல்லுக்காக பூமிக்கும் வானத்திற்கும் இடையே ஒரு பேரொளியைக்கண்டிருப்பீர்"என்று பரவசத்துடன் கூறினார்கள்.
ஆதாரம்:அல் கஸ்ஸுல் இஸ்லாமி
அறிவிப்பாளர்:அப்துல்லாஹ் பின் உமர்