Thursday, August 26, 2010

இருதயத்தை சுத்தி செய்யும் சூட்சுமம்


ஹஸன் பஸ்ரி(ரஹ்) கூறினார்கள்."ஒரு நாள் பஸ்ரா நகரத்தில் ஒரு கடைவீதியில் நான் சென்று கொண்டிருந்த பொழுது அங்கே ஒரு மருத்துவரைக்கண்டேன்.மக்கள் அம்மருத்துவரை அணுகி தங்களது நோயை விளக்கி மருந்துகளை பெறுவதற்காக அவரை சூழ்ந்து நின்றிருந்தனர்.என்னுடன் நின்றிருந்த ஒரு வாலிபர் அவரை அணுகி "வைத்தியரே!பாவங்களை அகற்றி,இருதயங்களை சுத்தி செய்யும் மருந்துகள் தங்களிடம் உண்டா?"எனக்கேட்டார்.

"ஆம்!என்னிடம் உண்டு நான் தரும் பத்து வஸ்துக்களைப்பெற்றுக்கொள் என்ற வைத்தியர் பின் வறுமாறு கூறினார்.

"பணி வென்னும் மரச்சாற்றுடன்,ஏழ்மை எனும் மரச்சாற்றை எடுத்துக்கொள்.அதில் தவ்பா என்னும் கடுக்காயைப்போட்டு,திருப்தி என்ற உரலில் இட்டு,போதும் என்ற குழவியினால் அதனை அரை.பக்தி என்ற பாத்திரத்தில் ஊற்றி நாணம் என்ற நீரை ஊற்று.அன்பு எனும் நெருப்பினால் அதனை காய்ச்சி,நன்றி என்னும் குவளையில் ஊற்றி,ஆதரவு என்ற விசிறியால் ஆற்று.பின்னர் புகழ் என்ற கரண்டியால் அதனைப்பருகு.நீ அவ்வாறு செய்தால் உனது இம்மை,மறுமையின் எல்லாவித நோய்களும் தீரும்"என்றார் வைத்தியர்.








Wednesday, August 25, 2010

எளிமையின் சிகரம் ஹஜரத் அலி (ரலி)



ஹஜரத் அலி (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் வெளிநாட்டு பிரயாணி ஒருவரின் ஒட்டகம் வழியினில் இறந்து விட கலீபா அலி (ரலி) அவர்களை சந்தித்து தமக்கு உதவி கேட்கலாம் என்ற எண்ணத்துடன் வெகு தூரம் நடந்து வந்து தலைநகர் மதீனா வந்து சேர்ந்தார் அவ்வெளிநாட்டுப்பிரயாணி.பின்னர் கலீபாவின் திருமகனார் ஹஜரத் ஹுசைன் (ரலி) அவர்களை சந்தித்து விஷயத்தைக்கூறினார்.

தனது தந்தையார் வெளியில் சென்று இருப்பதாகவும்,அன்னார் வரும் வரை பள்ளிவாசலில் இருக்கும் படி கூறி விட்டு அவருக்கு உணவு கொண்டு வருவதற்காக தன் இல்லத்திற்கு சென்று விட்டார்கள்.

அன்னார் சென்ற சிறிது நேரத்தில் பள்ளிவாசலுக்கு வந்த ஒரு எளியவர் ஒரு ஓரத்தில் அமர்ந்து தாம் கொண்டுவந்த அந்த உணவை உண்ண ஆரம்பித்தார்.சற்று நேரத்தில் ஹுசைன் (ரலி)அவர்கள் தான் கொண்டு வந்த உணவை பிரயாணி முன் வைத்து உண்ணுமாறு வேண்டினார்.

அதற்கு அப்பிரயாணி ஓரத்தில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தவரை சுட்டிக்காட்டி "அதோ,அங்கே பாருங்கள்!பாவம் அவர் மிகுந்த எழை போல் தெரிகின்றது.அவரிடம் காய்ந்து போன ரொட்டிகள்தான் இருக்கின்றது.தொட்டுக்கொள்ளக்கூட எதுவுமின்றி காய்ந்த ரொட்டிகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றார்.அவரை இங்கே அழைத்து வாருங்கள்.அவர் என்னுடன் சேர்ந்து இந்த உணவை அருந்தட்டும்" என்றார்.

வெளிநாட்டுப்பிரயாணி சுட்டிக்காட்டிய திக்கை நோக்கிய ஹஜ்ரத் ஹுசைன்(ரலி) அவர்கள் புன்னகை புரிந்தவர்களாக கூறினார்கள்."அவர்கள் வேறு யாரும் அல்ல.நீங்கள் நாடி வந்தவர்களும்,என் தந்தையுமான கலீபா அலி (ரலி)அவர்கள் தான்.எப்பொழுதும் அவர்கள் வழக்கமாக உண்ணும் உணவைத்தான் உண்டுகொண்டிருகின்றார்கள்.இதை விட சிறந்த உணவை அவர்கள் உண்பதில்லை."என்று கூறினார்கள்.

மாபெரும் இஸ்லாமிய பேரரசின் ஈடு இணையற்ற தலைவர் ,அன்னாரின் காலடியில் செல்வங்கள் கொட்டிக்கிடக்கின்றது.ஆயினும் அன்னார் உண்பதோ....!!!!
வெளிநாட்டு பிரயாணி அப்படியே மலைத்து நின்றார்.

Saturday, August 21, 2010

ஏழைகளின் அறம்




"நாயகமே!செல்வந்தர்கள் நன்மைகளை எல்லாம் அபகரித்துக்கொண்டு சென்றுவிடுகின்றார்கள்..நாங்கள் தொழுவது போல் அவர்களும் தொழுகின்றனர்.நாங்கள் நோன்பு நோற்பது போல் அவர்களும் நோன்பு நோற்று விடுகின்றனர்.ஆனால் தங்களிடன் உள்ள செல்வத்தை எழைகளுக்கு வாரி வழங்கி நன்மைகளை எல்லாம் பெற்று விடுகின்றனர்.எங்களால் அறம் செய்ய முடிய வில்லையே"என்று சில வறிய முஹாஜிரீன்கள் ஏக்கத்துடன் கேட்டனர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அறம் செய்யக்கூடிய தகுதியை நிச்சயமாக அளித்துள்ளான்.நிச்சயமாக சுப்ஹானல்லாஹ் என்ற ஒவ்வொரு தஸ்பீஹும் அல்ஹம்துலில்லாஹ் என்ற ஒவ்வொரு தஹ்மீதும்,அல்லாஹு அக்பர் என்ற ஒவ்வொரு தக்பீரும் அறத்தை சார்ந்தவையே ஆகும்.இன்னும் நற் செயல் புரியுமாறு பிறரை பணிப்பதும் அறம்தான்.தீயசெயல் புரியாது விலக்குவதும் அறம்தான்"என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:அபூதர் (ரலி)
ஆதாரம்:முஸ்லிம்


Add Video

Wednesday, July 28, 2010

பெருமானார்(ஸல்)அவர்களின் பரவசம்.




பெருமானார்(ஸல்)அவர்கள் ஸஹாபாக்களில் ஒரு பிரிவினரை போருக்காக தேர்ந்தெடுத்து ,அவர்களில் ஒவ்வொருவருக்கும் தேவையான உணவுப்பொருட்களையும் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவ்வீரர்களில் ஒருவரான ஹுதைபா(ரலி)அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் வழங்க விடுபட்டுப்போய் விட்டது.படை புறப்பட்டுப்போய் விட்டது.

ஹஜ்ரத் ஜிப்ரீல்(அலை) அவர்கள் பெருமானார்(ஸல்)அவர்கள் முன் தோன்றி "நபியே!திண்ணமாக என் ஹக்கன் என்னை தங்களிடம் அனுப்பி உள்ளான்.உங்களது தோழரகள் அனைவருக்கும் உணவுப்பொருட்கள் கொடுத்தனுப்பிய தாங்கள் ஹுதைருக்கு மட்டும் கொடுக்க மறந்து விட்டீர்கள்.அவர் "ஆகாரங்களில் சிறந்தது யாரப்பி"என்று சொல்லிய வண்ணம் சென்று கொண்டிருக்கின்றார்.மறுமை நாளில் ஹுதைரின் இம்மொழி விண்ணுக்கும் ,மண்ணுக்கும் இடையே பேரொளியாக விளங்கப்போகின்றது.யாரிடமேனும் ஹுதைருக்கு உணவுப்பொருட்களைக்கொடுத்தனுப்பும்படி அல்லாஹ் கூறினான்"என்றனர்.

பெருமானார்(ஸல்)அவர்கள் ஒரு தோழரை அழைத்து ஹுதைருக்கு தேவையான உணவைக்கொடுத்து"ஹுதைரைக்கண்டு இவ்வுணவைக்கொடுத்ததும் ,ரசூலுல்லாஹ் தங்களுக்கு ஸலாம் சொன்னார்கள்.மேலும் உங்களுக்கு உணவுப்பொருளைத்தர மறந்து விட்டார்கள்..திண்ணமாக என் இறைவன் என்னிடம் உங்களைப்பற்றி நினைவூட்ட ஜிப்ரீல்(அலை)அவர்களை அனுப்பி வைத்தான்.அவர் உங்களைப்பற்றி நினைவூட்டியதுடன்,உங்கள் இருப்பிடத்தையும் அறிவித்தார் என்று நான் கூறியதாக கூறுங்கள்"என்று சொல்லி தோழரை ஹுதைரின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.

ஹுதைர் சென்ற பாதை நோக்கி விரைந்த அந்தத்தோழர் ஹுதைரை நெருங்கி மேற்கூறியவாறு உரைத்தனர்.இதனைக்கேட்ட ஹுதைர் அல்லாஹ்வைப்புகழ்ந்து,பெருமானார்(ஸல்)அவர்கள் மீது சலவாத்து சொல்லி அகம் மகிழ்ந்தார்.

"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.ஏழு வானங்களுக்கு அப்பாலிருக்கும் அர்ஷுக்கு மேலிருந்தவாறு என்னை என் ஹக்கன் நினைவு கூர்ந்துள்ளான்.என் பசியையும்,சோர்வையும் கண்டு மனமிறங்கிஉள்ளான்.யாரப்பே!ஹுதைரை நீ மறக்காதது போன்று ஹுதைரையும் உன்னை என்றென்றும் மறக்காமல் இருக்கும் இருக்கும்படி செய்வாயாக!"என்று ஹுதைர் இரு கையேந்தி துஆ கேட்டனர்.

இவ்விபரத்தை அத்தோழர் பெருமானார்(ஸல்)அவர்களிடம் சொன்னதும்,பெருமானார் அவர்கள்"ஹுதைர் அவ்வாறு கூறிய தருணத்தில் மட்டும் நீர் வானத்தை பார்த்திருப்பீராயின் அவரது இச்சொல்லுக்காக பூமிக்கும் வானத்திற்கும் இடையே ஒரு பேரொளியைக்கண்டிருப்பீர்"என்று பரவசத்துடன் கூறினார்கள்.

ஆதாரம்:அல் கஸ்ஸுல் இஸ்லாமி
அறிவிப்பாளர்:அப்துல்லாஹ் பின் உமர்

மஹர்


‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.’ (அல்குர்ஆன் 4:4)

‘நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரை…நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்..’ (அல்குர்ஆன் 33:50)

‘பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் – அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும். இது நல்லோர் மீது கடமையாகும்.’ (அல்குர்ஆன் 2:236)

‘..அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்…’ (அல்குர்ஆன் 4:24)

ஒரு தடவை நபி(ஸல்) அவர்களிடம் வந்து ஒரு இளைஞர் "நான் மணம் செய்யப்போகின்றேன்.ஆனால் என்னிடம் மஹராக கொடுக்க எதுவுமே இல்லை.நான் அணிந்திருக்கும் இந்த ஒரே ஒரு வேட்டியத்தவிர.அதனால் இந்த வேட்டியை கிழித்து ஒரு பகுதியை என் மனைவிக்கு மஹராக கொடுக்கவா" என்றார்.

இதனைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள் "வேண்டாம் கிழித்தீர்களானால் இருவருமே உபயோகிக்கமுடியாததாகி விடும்.நான் ஒன்று சொல்கின்றேன்.உமக்கு குர் ஆன் ஷரீபில் எந்த சூராவாவது மனனம் செய்துவைத்திருக்கின்றீரா?"என்று கேட்டதும் அவ்விளைஞர் "ஆம்" என்றார்.

உடனே நபி (ஸல்)அவர்கள் "சரி நீர் மனனம் செய்த சூராக்களை உமது மனைவிக்கும் கற்றுக்கொடும்.நீர்கற்றுக்கொடுத்து, கற்றுக்கொடுத்ததை மஹராக்கிக்கொள்ளும் "என்று கூறி அனுப்பிவைத்தார்கள்.

ஆதித்தந்தை ஆதம்(அலை)அவர்கள் அளித்த மஹர்:

ஆதம் அலை அவர்களில் இருந்தே ஹவ்வா அலை அவர்களை சிருஷ்டித்த இறைவன் அமரர்கள் (வானவர்கள்) சாட்சியாக ஆதம்(அலை) அவர்களுக்கும்,ஹவ்வா (அலை )அவர்களுக்கும் மணம் செய்துவைத்தான்.அவ்விழாவில் திருமணப்பேருரை நிகழ்த்தியதும் இறைவனே.மணம் முடித்த பின் ஆதம் (அலை) அவர்கள் தன் மனைவியின் அருகே நெருங்கிய பொழுது அமரர்கள் அவர்களை தடுத்து விட்டனர்.மனைவிக்கான மஹரை கொடுக்காதவரை மனைவியை நெருங்க கூடாது என்ற இறைக்கட்டளையை நினைவூட்டீனர்.

"மஹர் என்றால் என்ன?" என்று வினவியபொழுது

"திருமணத்தின் போது கணவன் மனைவிக்கு கொடுக்கக்கூடிய தொகை"என்று வானவர்கள் விளக்கம் பகர்ந்தனர்.

"அவ்வாராயின் நான் என் மனைவிக்கு என்ன கொடுக்கவேண்டும்"என்று வினவினர் ஆதம் அலை அவர்கள்.

"உமது வழிவழிப்பேரராகிய முஹம்மது(ஸல்)அவர்கள் மீது மும்முறை ஸலவாத்து சொல்லும்"என்று வானவர்கள் கூறினர்.

அதன் படியே நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்லி,அதனையே தன் மனைவிக்கு மஹராக கொடுத்தனர் ஆதித்தந்தை அவர்கள்

Saturday, July 24, 2010

அறம் என்னும் அற்புதம்


புரவி மீது இவர்ந்து வந்து யாசிப்போருக்கும் தானம் அளியுங்கள்.
அ:அதிபிப்னு ஹாதிம்
ஆ:புகாரி,முஸ்லிம் நஸாயீ

தம்முடைய அவசியத்தேவைகளில் இருந்து மீதமுள்ளதை தர்மம் செய்வதும்,தன் குடும்பத்தாரில் இருந்து தர்மம் செய்யத்துவங்குவதும் மேலான தர்மம் ஆகும்.
அ:அபூ ஹுரைரா
ஆ:புகாரி,அபூதாவுத்,நஸாயீ

தர்மம் செய்தவர் தன் செய்த தர்மத்தை திரும்ப பெறுவாராயின் வாந்தி எடுத்ததை மீண்டும் உண்பதற்கு நிகராவார்.
அ:உமர் (ரலி)
ஆ:புகாரி,முஸ்லிம் நஸாயீ,முஅத்தா,திர்மிதி

அறம் செய்தல் இறைவனது சினத்தை தணிய வைத்து தீய இறப்பை விட்டும் மனிதனை காக்கின்றது.
அ:அபூ ஹுரைரா
ஆ:திர்மிதி

"ஒரு லட்சம் பொன் நாணயத்தை விட ஒரே ஒரு பொன் நாணயம் உயர்வானதாகி விட்டது"நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன பொழுது "நாயகமே!அது எங்ஙனம் "என்று வினவப்பட்டது.

"ஒரு மனிதரிடம் இரண்டே பொன் நாணயங்கள் இருந்தன.அவற்றில் இருந்து நல்லவற்றை தேர்ந்தெடுத்து தானம் செய்து விட்டார்.மற்றொரு செல்வந்தர் தன் கருவூலத்தில் இருந்து ஒரு லட்சம் பொன் நாணயங்களை எடுத்து தானம் செய்து விட்டார்.முந்தியவர் தானம் செய்த நல்ல ஒரு பொன் நாணயம் ,பிந்தியவருடைய ஒரு லட்சம் பொன் நாணயத்தை விட சிறந்ததாகி விட்டது.ஏனெனில் முன்னவர் தன் பொருளில் இருந்து பாதியில் நல்லவற்றை அளித்தார்.பின்னவர் தன் கருவூலத்தில் இருந்து ஒரு சிறு பாகத்தினை அளித்தார்"என மறு மொழி பகர்ந்தார்கள்.
அ:அபூ ஹுரைரா
ஆ:திர்மிதி

Friday, July 9, 2010

மிஃராஜ்

தன் அடியாரை சங்கைமிகு பள்ளியிலிருந்து ,(வெகு தொலைவான)அக்ஸா பள்ளிவாசலின் பால்,ஒரு இரவில் இரவுப்பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிக பரிசுத்தமானவன்.(மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய)அது எத்தகையது என்றால்நாம் அதை சுற்றிஉள்ள பகுதியை அபிவிருத்தியடைய செய்து இருகின்றோம்.நம்முடைய அத்தாட்சிகளைஅவருக்கு நாம் காண்பிப்பதற்காக (அழைத்துச்சென்றோம்)நிச்சயாமாக அவனே அனைத்தையும் செவியுறுபவானாகவும்,பார்ப்போனாகவும் இருகின்றான்.
அல்குர் ஆன் - 17:1

கஹ்பாவின் தாழ்வாரத்தில் ஹதீம் அல்லது ஹஜ்ரு என்னும் இடத்தில் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருக்களித்து சாய்ந்து படுத்திருக்கும் நிலையில்,தூக்கத்திற்கும்,விழிப்பிற்கும் இடையே உள்ள நிலையில் நாயகம் (ஸல்)அவர்கள் இருந்த பொழுது ஜிப்ரீல் (அலை)
அவர்களால் அல்லாஹ்வின் ஆணைப்படி விண்ணுக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள்.

கோவேருக்கழுதைக்கு சற்றுத்தாழ்வாகவும்,கழுதைக்கு சற்று உயரமாகவும் ஒரு வெண்மை நிறத்திலான உயிர் பிராணி (புராக்) பெருமானார் முன் கொண்டுவரப்பட்டது.அதன் வேகம் எத்தகையது என்றால் அது தன் பார்வை செல்லும் தூரத்திற்கு ஒரு அடி வைத்து தாண்டி விடும் ஆற்றலுடையது.அதில் பெருமானார்(ஸல்) அவர்கள் அமரவைக்கப்பட்டு ஜிப்ரீல் (அலை) அவர்களால் விண்ணுலகிற்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள்.

1 வது வானத்தில் ஆதம் (அலை)அவர்களும்
2 வது வானத்தில் யஹ்யா(அலை)
3 வது வானத்தில் யூஸுஃப் (அலை)அவர்களும்
4 வது வானத்தில் இத்ரீஸ் (அலை)அவர்களும்
5 வது வானத்தில் ஹாரூன் (அலை)அவர்களும
6 வது வானத்தில் மூஸா (அலை)அவர்களும்
7 வது வானத்தில் இப்றாஹீம்(அலை)அவர்களும் இருந்தார்கள்.

வானலோகத்தில் ஒவ்வொரு அடுக்கிலும் இருந்த நபிமார்களை ஹாத்தமுன் நபிய்யீன்(ஸல்)அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை)அவர்கள்தாம் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். நபிமார்களை சந்தித்து நல்லாசி பெற்றார்கள்.

ஆறாவது வானத்தில் இருந்த மூஸா (அலை) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களைக்கண்டு அழுதனர்.காரணம் கேட்டபொழுது" நிச்சயமாக எனக்குப்பின் நபியாக அனுப்பப்பட்ட ஓர் இளைஞருடைய சமூகத்தினர்,என் சமூகத்தினரை விட அதிகளவு சுவனபதி செல்வார்கள் என்று எண்ணி அழுகின்றேன்"என்றார்கள்.

திட்டமாக மற்றொரு முறை இறங்குகையில் அவரை(ஜிப்ரீலை) அவரது சுய உருவில் கண்டனர்.அல்குர் ஆன் 3:13

"ஸித்ரத்துல் முண்தஹா"என்னும் (இலந்தை) மரத்தின் எல்லையில் இக்காட்சி நிகழ்ந்தது.அல்குர் ஆன் 3:14

அவ்விடத்தில்தான் நல்லடியார்கள் தங்கும் சுவர்க்கம் இருக்கின்றது.அல்குர் ஆன் 3:15

பின்னர் ஸித்ரத்துல் முண்தஹா என்னும் சுவனபதிக்கு மேல்கோடியிலுள்ள ஒரு இலந்தைமர நிழலுக்கு அழைத்து வரப்பட்ட நபி(ஸல்)அவர்கள் அம்மரத்தை நோக்கினார்கள்.அதன் பழம் குடம் போலும்,இலைகள் யானையின் காது போன்றும் தோற்றம் அளித்தது.அந்த மரத்தின் அடிப்பாகத்தில் இருந்து நாண்கு ஆறுகள் ஒலித்தோடிக்கொண்டிருந்தன.அவற்றில் இரண்டு வெளிப்புறத்திலும்,இரண்டு மறைவாகவும் இருந்தன.

அதனை கண்ணுற்ற நபி(ஸல்)அவர்கள் ஜிப்ரீல்(அலை)அவர்களிடம் "இவை இரண்டும் என்ன?"என்று கேட்டனர்.
"மறைவாக உள்ள இரண்டும் சுவனபதியில் உள்ளவைகளாகும்.வெளிப்புறமாக உள்ள மற்ற இரண்டும்நைல் நதியும்,புராத் நதியுமாகும்"என்று ஜிப்ரீல் (அலை)அவர்கள் பதிலுறுத்தனர்.

பிறகு பைத்துல் மஃமூர்(வானவரின் பள்ளி)க்கு அழைத்துச்சென்று நபி(ஸல்)அவர்களுக்கு பால் வழங்கப்பட்டது.

பிறகு ஆறாவது வானத்திற்கு வந்துகொண்டிருந்த பொழுதுமூஸா (அலை )அவர்கள் "என்ன கட்டளை பெற்றீர்கள்?"என்று கேட்டார்கள்.
"50 வேளை தொழுகை செய்யும் படி கட்டளை பெற்றேன்"
"நிச்சயமாக உங்களது சமூகத்தினர் இதனை ஆற்றுவதற்கு ஆற்றலற்றவர்கள்.இறைவன் ஆணையாக நான் உங்களுக்கு முன் மக்களை சோதித்துப்பார்த்தேன்.எனவே மீண்டும் இறைவனிடம் சென்று தொழுகையை இன்னும் இலகுவாக்கும் படி கோருங்கள்" என்றனர்.

இவ்விதமாக ஐவேளை தொழுகையைக் கட்டளையிடப்படும் வரை நபி(ஸல்)அவர்கள் இறைவனுக்கும் மூஸா(அலை)அவர்களுக்கும் இடையில் போய் வந்து கொண்டிருந்தார்கள்.

இருப்பினும் மூஸா (அலை) அவர்கள் "உங்களுடைய சமூகத்தினர் ஐவேளைத்தொழுகையைக்கூட தொழ ஆற்றல் பெற்று இருக்க மாட்டார்கள்.எனவே மீண்டும் இறைவனிடம் சென்று தொழுகையை மேலும் இலகுவாக்கும் படி கோருங்கள்"என்றார்கள்.

அதற்கு நபி(ஸல்)அவர்கள் "நிச்சயமாக நான் என் இறைவனிடம் வெட்கமுறும் வரை கேட்டு விட்டேன்.இப்பொழுது அந்த கட்டளைக்கு இணங்கி விட்டேன்.அதனை ஏற்றுக்கொண்டு விட்டேன்."என்றனர்.

அறிவித்தவர்கள்:அனஸ்,மாலிக்(ரலியல்லாஹு அன்ஹுன்ன
ஆதாரம்:புகாரி,முஸ்லிம்,நஸாயீ.திர்மிதி

நபியே!சூரியன் (உச்சியை விட்டு)சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (யுள்ள லுஹர்,அஸர்,ம்ஃரிப்,இஷா ஆகிய)தொழுகைகளை நிலை நிறுத்துவீராக!மேலு,பஜ்ரு தொழுகையையும் தொழுது வாரும்.நிச்சயமாக பஜ்ருடைய தொழுகையானது (வானவர்கள் வருகைக்குறியதாகும்)அல்குர் ஆன்-17:78 -