Wednesday, July 10, 2013

ரமலான் கரீம்


Wednesday, February 22, 2012

எளிய திருமணம்ஹள்ரத் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் நாயகத்தோழர்களிலேயே பிரபலமான செல்வந்தர்.பெரும் செல்வந்தராக இருந்தாலும் படு எளிமையாக வாழ்ந்தவர் ஆவார்.

அவரது திருமணம் மதினா நகரில் நடந்தது.அது சமயம் பெருமானார் (ஸல்)அவர்கள் மதினா நகரில் இருந்த போதிலும் தமது திருமணத்தைப்பற்றி ஒரு வார்த்தைகூட கூற விலை.

திருமணத்திற்கு அடுத்த நாள் ஹள்ரத் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி) அவர்கள் பெருமானார் முன் இருந்தார்கள்.அவர்களைக்கண்டதும் அண்ணல்(நபி)ஸல் அவர்கள் “அப்துர்ரஹ்மான்,உம் மீது மணவாடை வீசுகின்றதே.என்ன விஷயம்?”
என்று வினவினார்கள்.

“ஆம் ரசூலுல்லாஹ் அவர்களே!நேற்று என் திருமணம் ஒரு அன்ஸாரி பெண்ணுடன் நடந்தது”என்றார் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி)அவர்கள்.

“அல்லாஹ் உடைய அருளும் மங்கலமும் உங்கள் இருவர் மீதும் உண்டவதாக “என்று பெருமானார் (ஸல்)அவர்கள் வாழ்த்தினார்கள்.

ஊர் மக்கள்: அனைவரையும் படை திரட்டி,லட்சக்கணக்கான கரன்சிகளை கொட்டி,விரயம் செய்து விருந்து வைத்து ,ஆடல் பாடல் மின்விளக்கு அலங்காரக்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்து நடத்தினால்தான் பெருமைக்குறிய விஷயம் என்று நினைக்கும் நம்மவர்களுக்கு நாயகத்தோழரின் திருமணத்தை எண்ணிப்பார்க்க வேண்டும்.திருமண செய்தி அதே ஊரில் இருந்த பெருமானார் (ஸல்)அவர்களுக்கே கூட தெரிவிக்கப்படாமல்,அவ்வளவு பெரிய செல்வந்தர் மிகவும் எளிமையை கடை பிடித்தார் என்பதைபற்றி திருமணம் என்ற பெயரில் தேவை அற்ற அனாச்சாரங்களும் ஆடம்பரங்களும் செய்வோர் எண்ணிப்பார்க்கவேண்டும்.


Friday, January 20, 2012

இமாம் கஸ்ஸாலியின் இரக்ககுணம்

இமாம் கஸ்ஸாலி (ரஹ்)அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் ”ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்” - ”அறிவுலகப்பேரொளி” என்று போற்றப்பட்டவர்.இவர் ”இஹ்யாவு உலூமித்தீன்”,”கீமியாயே சாஆதத்” என்ற மாபெரும் நூற்களை புனைந்து வரலாறு போற்றப்படும் பேரறிஞர்.இவர் எழுதிய நூற்கள் காலவெள்ளத்தைக்கடந்தும் நிலைத்து நிற்பவை.

ஒரு நாள் அவர் தம் எழுது கோலால் மையை தோய்த்து எழுதிக்கொண்டிருந்தார்.அப்பொழுது ஒரு ஈ அவரது எழுதுகோலின் முனையில் வந்து அமர்ந்து அதிலிருந்த மையை குடித்தது.அந்தக்காலத்தில் மைகள் எல்லாம் அரிசி,மாவில் இருந்துதான் தயாரிக்கப்படும்.

ஈ தன் தாகம் தீரும் வரை குடிக்கட்டும் என்று எழுது கோலை ஆடாமல் அசையாமல் பிடித்து இருந்தார்.ஈ தன் தாகம் தீரும் மட்டும் குடித்து விட்டு அங்கிருந்து பறந்து சென்றது.அது வரை பொறுமையுடன் காத்திருந்து பிற்பாடே அவர் மறுபடியும் தொடர்ந்து எழுதத்தொடங்கினார்.அவரது இந்த இரக்க சுபாவம் காலவெள்ளத்தைக்கடந்தும் போற்றப்படுகின்றது.

Friday, January 13, 2012

பரகத்

ஒரு நாள் அப்பாஸிய கலீஃபா ஹாரூன் ரஷீத் தன் நண்பர் ஒருவருடன் உணவருந்திக்கொண்டிருந்தார்.அப்பொழுது உணவுப்பொருட்கள் சிதறி விரிப்பில் விழுந்தன.

நண்பர் சிதறிய அந்த உணவுப்பொருளை பொறுக்கி எடுத்து உண்ணலானார்.ஹாரூன் ரஷீதுக்கு இது அறுவருப்பாக தோன்றியது.நண்பரை ஏறிட்டுப்பார்த்தார்.

எதற்காக கலீஃபா தம்மை ஏறிடுகின்றார் என்பதை உணர்ந்த கொண்டு நண்பர் இவ்விதம் கூறினார்.”அண்ணல் நபி (ஸல்)அவர்கள் இப்படி சிதறி விழும் உணவை எடுத்து அருந்துபவருக்கு பரகத் (அபிவிருத்தி)எப்பொழுதும் இருக்கும்”என்று கூறியதை எடுத்துச்சொன்னார்.

இதனைக்கேட்ட கலீஃபா “இது எனக்கு தெரியாதே.இது வரை நான் அறிந்திருக்க வில்லையே.இதனை நீங்கள் என்னிடம் கூறியதுக்காக என் அன்புப்பரிசாக இதனை ஏற்றுக்கொள்ளுங்கள்”என ஒரு உயரிய மணிமாலையை பரிசளித்தார்.

அதனைப்பெற்றுக்கொண்ட நண்பர் “பார்த்தீர்களா?இப்பொழுதுதான் சிதறி விழுந்த உணவுப்பொருளை எடுத்து அருந்தினேன்.உடனே பரகத் கிடைத்து விட்டது”என்றார்.அல்லாஹ்வின் ரசூலின் வாக்கு எத்தனை சத்தியமானது என்பதினை உணர்ந்து நண்பர்கள் இருவரும் சிலாகித்து மகிழ்ந்தனர்.

Wednesday, January 11, 2012

அன்னை உம்மு ஹபீபா(ரலி)அன்னை உம்மு ஹபீபா பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவி ஆகி மதினாவில் வசித்த பொழுது அவரது தந்தை அபு சுப்யான் அவரைக்காண வந்திருந்தார்.சுப்யான் இஸ்லாத்திற்கு மாறு பட்டவர்.உம்மு ஹபீபாவின் குடிலில் ஒரு ஜமக்காளம் விரித்து இருந்ததின் மீது சுப்யான் அமர யத்தனித்த பொழுது உம்மு ஹபீபா அதனை அவசர அவசரமாக சுருட்டி வைத்து விட்டு தந்தை அமர ஒரு பாயை கொணர்ந்து போட்டார்.

இதனைக்கண்ட சுப்யான் கோபத்துடன் “மகளே,இந்த ஜமக்காளம் நான் இருக்க தகுதி அற்றதா?அல்லது நான் இதில் அமர தகுதி அற்றவனா?அதனை ஏன் சுருட்டி வைத்து விட்டாய்?:”என்று வினவினார்.

அதற்கு உம்மு ஹபீபா “அது பெருமானார் (ஸல்) அவர்கள் பரிசுத்த திருமேனி அமரும் விரிப்பு.ஆதலால் நிராகரிப்பாவரான அபு சுப்யான் அமர தகுதி அற்றது”என்று தன் தந்தையைப்பார்த்துக்கூறினார்.

Thursday, May 19, 2011

துஆ செய்யுங்கள்.


எனது மதிப்புக்குறிய சாச்சாவும்,சம்பந்தியுமான ஆலிஜனாப் எஸ் எம் எஸ்

ஹாஜா முஹைதீன்(உரிமையாளர் சாரா ஸ்டீல் ஏஜென்ஸீஸ்,நாச்சியார்

ஏஜன்ஸீஸ்.கீழக்கரை) அவர்கள் கடந்த 8.5.11 அன்று சென்னையில் வபாத் ஆகி

9.5.11 அன்று கீழக்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.(இன்னாலில்லாஹி

வ இன்னா இலைஹி ராஜிவூன்).

அன்னாரின் மஃபிரத்துக்காக துஆ செய்யும் படி இனிய நட்புக்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

Monday, March 7, 2011

எது சிறந்தது?

இப்னு அப்பாஸ்(ரலி)அவர்களிடம் “நாட்களில் சிறந்த நாள் எது?மாதங்களில் மகத்தானது எது?நன்மைகளில் மேலானது எது?என்று வினவப்பட்டபொழுது அவர்கள் அதற்கு கீழ்கண்டவாறு பதிலளித்தார்கள்.

“நாட்களில் மேலானது வெள்ளிக்கிழமை
மாதங்களில் மகத்தானது ரமலான் மாதம்
நன்மைகளில் சிறந்தது ஐவேளை தொழுகையை அதற்குறிய நேரங்களில் தொழுவது”

இவ்விஷயம் அறிவின் தலைவாசல் அலி(ரலி)அவர்களுக்கு எட்டிய பொழுது ”உலகில் கிழக்கு மேற்கு அனைத்திலும் உள்ள அறிஞர்களும்,மார்க்க வல்லுனர்களும் இப்னு அப்பாஸ் கூறியதைப்போல் பதிலளிக்க இயலாது.இருப்பினும் நான் கூறுவேன் “நண்மைகளில் சிறந்தது இறைவன் உன்னிடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நன்மை.
மாதங்களில் மேலானது நீ உன் பாவங்களுக்காக இறைவனிடம் மன்னிப்புக்கோரி இறைவனிடம் தூய்மை அடைந்த மாதம்,
நாட்களில் சிறந்தது நீ இவ்வுலகில் அல்லாஹ்வின் நல்லடியானாக இறையடி ஏகும் நாள்”என்று உரைத்தார்கள்.