Wednesday, July 7, 2010

சிரிப்பு எத்தனை வகை



ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன்
ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி
இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
மகிமையில் சிரிப்பவன் மன்னன்

தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி
தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி
நிலை கண்டு சிரிப்பவன் காரியவாதி

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்
கொடுக்கும் பொழுது சிரிப்பவன் சூழ்ச்சிக்காரன்

மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்
வெற்றியில் சிரிப்பவன் வீரன்

விளையாமல் சிரிப்பவன் வீணன்
தற்பெருமையால் சிரிப்பவன் கோழை

அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி
அன்பால் சிரிப்பவள் அன்னை

காதலால் சிரிப்பவள் மனைவி
நிலை மறந்து சிரிப்பவள் காதலி

நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்
நினைவோடு சிரிப்பவன் அறிவாளி

குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி
கும்மி அடித்து சிரிப்பவன் இதய கசடுள்ளவன்

அகம் மகிழ்ந்து சிரிப்பவன் உண்மை நண்பன்
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.

படித்ததில் பதிந்தவை

அறத்தின் மகத்துவம்


பிர்அவுனைபற்றி குர் ஆனிலும்,ஹதீஸ்களிலும்,வரலாறுகளிலும் நிறைய அறிந்திருப்போம்.
பிர்அவுன் - மூஸா (அலை) அவர்களுக்கு வழிப்படாமல்,தன்னையே இறைவன் என்று கூறிய கொடியவன்.இறைவனுக்கு முற்றிலும் மாறுபட்டவன்."அல்லாஹ் ஒருவனே" என்று அந்த அர்ஷுக்குரியவனை வழிப்பட்ட மூஸா (அலை)அவர்களை பின்பற்றிய மக்களை துன்புறுத்தி கொடுமை செய்தவன்.அவனது சொல்லொண்ணா தொல்லைகளை கண்ட மூஸா (அலை)அவர்கள் இறைவனிடன் பிர் அவுனை அழித்து விடுமாறு மன்றாட்டம் செய்தார்கள்.

இறைத்தூதர்களான நபிமார்களின் பிரார்த்தனை உடனே அங்கீகரிக்கப்பட்டுவிடும் அல்லாஹ்விடத்தில்.அப்படி இருந்தும் பிர் அவுன் அழிக்கப்படாமல் மூஸா(அலை) அவர்களின் து ஆ கபூல் செய்யப்படாமல் இருந்து வந்தது.தொடர்ந்து பிர் அவுனின் தொல்லைகள் அதிகரிக்கத்தான் செய்தது.

இதனைக்கண்ட நபியவர்கள்"இறைவா!நபிமார்களின் பிரார்த்தனையை உடனே நிறைவேற்றுவதாக வாக்களித்து இருந்தாயே!ஆனால் பிர் அவுன் அழிக்கப்படாமல் இருக்கின்றானே?"என இறைவனிடம் வினவினார்கள்.

அதற்கு வல்ல இறைவன்"ஓ..மூஸாவே..நான் அவ்விதம் வாக்களித்திருப்பது உண்மைதான்.பிர் அவுன் இத்தனை அநியாயக்காரனாக இருந்தாலும் ஒரு சில நற்கிரியைகள் செய்து வருகின்றான்.அதனால் அவன் அழிக்கப்படாமல் தாமதப்படுத்தபட்டுள்ளான்"என்றுரைத்தான்.

"பிர் அவுன் இடத்திலுமா நற்கிரியைகள் நிகழ்கின்றன?" மூஸா (அலை)அவர்கள் திகைப்புடன் வினவ

"ஓ..மூஸாவே!அவன் அரசாட்சியில் ஏழைகளுக்கு மடங்கள் கட்டி உள்ளான்.அவனது ஆட்சியில் பசித்தோருக்கு அன்னதானம் வழங்கி உள்ளான்.வறியோர்கள் வயிறார உண்ட பின் அவனை அகம் குளிர வாழ்த்திவிட்டுஅவனுக்காக என்னிடம் பிரார்தனை செய்கின்றனர்"என இறைவன் கூறினான்.

பிர் அவுன் இந்த தர்மங்களை மக்கள் தன்னை ஏற்றிப்போற்றி,புகழவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே செய்து வந்தான்.இருப்பினும் அவனது இந்த தர்ம செயல்களால் ஏழை எளியவர்கள் நிறைவு பெறுகின்றனர் என்ற ஒரே காரணத்தினால் அவன் அழிக்கப்படாமல் தாமதப்படுத்தபட்டுள்ளான்.

பிர் அவுன் எப்படிப்பட்ட கொடூரன்.இருப்பினும் அவன் செய்த தர்மம் ,தர்மத்தின் தலைவனான அல்லாஹ்வையே அவன் மீது நோக்கச் செய்து விட்டது
என்றால் அந்த தர்மத்தின் மகத்துவம்,சக்தியை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

பிர் அவுன் தர்மச்செயல் புரிந்ததால் இறைவனின் அன்பை எட்டி விட இயலாதுதான்.பிர் அவுன் எப்பொழுது தானே இறைவன் என்று மமதை கொண்டு ஆடினானோ அக்கணமே இறைவனால் சபிக்கப்பட்டவன் ஆகிவிட்டான்.என்றாலும் தர்மத்தின் தன்மையானது இறைவனை மிகவுமே கவர்ந்து விடுகின்றது என்ற காரணத்தினாலேயேதான் பிர் அவுன் அழிவை விட்டும் சிறிது தாமதபடுத்தபட்டான்

தர்மத்தின் சக்தி எத்தனை வல்லமையானது.அல்ஹம்துலில்லாஹ்!

Tuesday, July 6, 2010

வாழ்க்கைக் கணக்கு


நல்லவற்றைக் கூட்டிகொள்+

தீயவற்றை கழித்துக்கொள் -

அறிவைப்பெருக்கிக்கொள் *

நேரத்தை வகுத்துக்கொள் /

வளர் பிறை போல் அறிவை வளர் <

செலவைக்குறை அறிவைப் பெருக்கு >

அன்பை பெருக்கு ஆணவத்தைக்குறை

நல்லவர்களுடன் இணையாய் இரு

பிறரை நம்பி வாழும் வாழ்வு சுகமற்றது

வீண் சந்தேகம் தவிர் ?

கெட்ட நண்பர்களுக்கு முற்றுப்புள்ளி வை .

நல்ல பெயரை சேர்த்துக்கொள் @

அனைவருக்கும் வினோதம் ஆகி விடாதே !

நற் செயலுக்கு கமா போடு ,

அஷ்ரத்துல் முபஷ்ஷரா

அஷ்ரத்துல் முபஷ்ஷரா - சுவன நற்பேறு பெற்ற உத்தமர்கள் பத்துபேர்.அவர்கள்,

1.ஹஸ்ரத். அபூபக்கர்

2.ஹஸ்ரத். உமர்

3.ஹஸ்ரத். உதுமான்

4.ஹஸ்ரத். அலி

5.ஹஸ்ரத். தல்ஹா

6.ஹஸ்ரத். ஜுபைர்

7.ஹஸ்ரத். ஸைஈதிபுனு ஜுபைர்

8.ஹஸ்ரத். அத் பின் அபிவக்காஸ்

9.ஹஸ்ரத். அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்

10.ஹஸ்ரத். அபூ உபைதாபின் ஜர்ராஹ் - ரலியல்லாஹு அன்ஹுன்ன


வாழ்க்கை

1. வாழ்க்கை என்பது ஒரு குறிகோள்:அதை அடைய வேண்டும்.

2. வாழ்க்கை என்பது ஒரு வாக்கு:அதை நிறைவாக்க வேண்டும்.

3. வாழ்க்கை என்பது ஒரு பயணம்:அதை முடிக்க வேண்டும்.

4. வாழ்க்கை என்பது ஒரு கடமை:அதை நிறை வேற்ற வேண்டும்.

5. வாழ்க்கை என்பது ஒரு சவால்:அதை சந்திக்க வேண்டும்.

6. வாழ்க்கை என்பது ஒரு பாடல்:அதைப் பாட வேண்டும்.

7. வாழ்க்கை என்பது ஒரு கனவு:அதை நனவாக்க வேண்டும்.

8. வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு:அதை ரசிக்க வேண்டும்.

9. வாழ்க்கை என்பது ஒரு நீர் நிலை.அதை நீந்திச் செல்ல வேண்டும்.

10. வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம்:துணிவு,பொறுமை,தளராமனம் என்ற மூன்று கருவிகளுடன் போராட வேண்டும்.

Monday, July 5, 2010

ஜின்



குல் ஊஹிய இல்லாஹ் இன்னஹுஸ்தமஹ நப்ருன் மினல் ஜின்னி பகாலு இன்னா ஸமிஹ்னா குர் ஆனன் அஜப்!
(நபியே நீர் கூறுவீராக !எனக்கு வஹி அறிவிக்கப்பட்டது."நிச்சயமாக ஜின்களில் சில நபர்கள் இந்த குர் ஆனை செவியுற்றனர்;பிறகு தம் கூட்டாத்தாரிடம் சென்று நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமான ஒரு குர் ஆனை செவியுற்றோம்"என்று கூறினர்.
அல்குர் ஆன்- அ-72:வ1



ஜின்கள் என்றால் யார்?

ஜின்கள் என்றால் மனிதர்கள் போன்ற உடல் அமைப்பும்,தோற்றமும்,குடும்பம் கோத்திரம் என்று வாழும் ஒரு இனமாகும்.இவற்றின் தனிச்சிறப்பு மனிதர்களின் கண்களை விட்டும் மறைந்து வாழும் சக்தியுடையவை.இதனால் இவ்வினத்திற்கு ஜின் என்று பெயரிடப்பட்டது.ஜின் என்பதற்கு கண்ணுக்கு அப்பால் மறைந்திருப்பவை என்று பொருளாகும்.

ஷைத்தான்களுக்கும் ஜின் என்றே கூறப்படுகின்றது.ஆயினும் ஷைத்தான் பொது வார்த்தை அல்ல.ஜின்களிலேயே துஷ்டத்தனம் கொண்டவைகளையே ஷைத்தான் எனப்படுகின்றது.ஜின்களின் படைப்பின் அடிப்படை நெருப்பாகும்.மேலும் அவை விண்ணில் சஞ்சாரம் செய்யும் ஆற்றல் பெற்றவை.

ஜின் இனத்தினர் நபி (ஸல்)அவர்கள் பிறப்புக்கு முன் விண்ணில் சஞ்சரித்து,வானவர்கள் தங்களுக்குள்ளே இறைத்திட்டங்கள் குறித்து பேசுவதை மறைந்திருந்து திருட்டுத்தனமாக கேட்டு வருவது வழக்கம்.குறிப்பாக நபி (ஸல்)அவர்களின் பிறப்புக்கு பின் அவர்களது நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வானவர்களால் தடுக்கப்பட்டு விட்டது.எனவே பூமியில் ஏதோ ஒரு அதிசயம் நிகழ்ந்து இருக்க வேண்டும்மென்று யூகித்துக் கொண்ட ஜின்கள் ,அதனைக்கண்டறிய பூமியின் பல பாகங்களுக்கும் குழுக்களை அனுப்பினர்.

அப்பொழுதுதான் ஒரு குழு நபி (ஸல்) அவர்களைன் குர் ஆன் ஓதுதலைக்கேட்டு தாமும் இஸ்லாத்தை ஏற்று ,பிறரிடமும் அதனை சொல்லி விளக்கின.அப்போதே அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு ஜின்கள் குர் ஆன் ஓதுவதைப் பற்றி வஹி அறிவித்து மேற்கண்ட வசனத்தை அருளினான்.

ஆதாரம்:புகாரி,முஸ்லிம்,திர்மிதி

ஜின் இனத்தை அடக்குகின்ற பொறுப்பை அல்லாஹ் மலக்குகளிடமே ஒப்படைத்து இருந்தான்.ஆகவே 'மனித இனத்தை அடக்குகின்ற பொறுப்பும் நம்மிடத்திலேதான் வரும்' என்று மலக்குகள் எண்ணினர்.மனிதர்களை சரி செய்ய மனிதர்களே போதும் என்பதினை கீழ்கண்ட வசனத்தின் மூலம் அல்லாஹ் அருளினான்.

அதற்கு வானவர்கள்"நீ தூய்மையானவன்.நீ எங்களுக்கு கற்றுகொடுத்ததை அன்றிவேறு எங்களுக்கு இல்லை.வேறு எதனையும் நாங்கள் அறிய மாட்டோம்.திண்ணமாக நீயே அறிவு மிக்கவன்,ஞானம் நிறைந்தவன்" என்று கூறினர்.
அத்:2-வச:32

மனித ஆற்றலின் வலிமையை"மலக்குகளின் கல்வி,அறிவு,ஞானம்,ஒரு வரையயறைக்கு உட்பட்டது.ஆனால் மனிதனின் அறிவாற்றல் அப்படிப்பட்டதல்ல.பூமியில் இருந்தவாறே பிறகிரகங்களையும்,அதன் இயக்கங்களையும் அறிகின்றான்.மனிதனின் அறிவு ,ஆற்றல்,மற்ற படைப்பினங்களை விட அதிகம் என்பதினையும்,மலக்குகள்,ஜின்களிடம் இல்லாத முழுமையான ஆற்றலைத் தரப்பட்ட மனித இனமே உலகில் எனக்கு பிரதிநிதியாக இயங்கத் தகுதியானது"என்று அல்லாஹ் மலக்குகளிடம் விளக்கி உள்ளான்.

சகப்பதிவர் ஒருவர் நிஜமாக சொன்னாரா அல்லது அப்படியல்லாமல் சொன்னாரா என்பது தெரிய வில்லை.தான் தினமும் ஜின்னை பார்ப்பதாக,தஹஜ்ஜத் வேளைகளில் குர் ஆன் ஓதும் சப்தமும்,பேச்சு சப்தமும் கேட்டு பக்கத்தில்போய் பார்த்தால் ஒன்றுமே இருக்காது.அது ஜின் தான் என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன் செல் போன் மூலம் பறிமாறப்பட்ட ஒரு வீடியோ காட்சி அது .அது புனைப் படுத்தியதாக இருந்தாலும் எப்படி என்னுள் திகிலை ஏற்படுத்தியதோ ,அதே போல் சக பதிவரின் ஜின் பற்றிய உரையாடலும் எனக்கு திகிலை ஏற்படுத்தி விட்டது.குர் ஆனை விரிவாக அலசிய போது நான் அறிந்தவற்றை பகிர்ந்திருகின்றேன்.உங்கள் அபிப்ப்ராயத்தை பின்னூட்டம் வழியாக கூறுங்கள்.

ஜின் தொழும் ,என்னை திகில் எற்படுத்திய அந்த வீடியோ காட்சி இதோ

Sunday, July 4, 2010

நிறைந்திடும் நெஞ்சம்





நபிகள் நாயகம் அவதரித்தார்
இந்த அகிலம் முழுதும் ஆதரித்தார்

வேண்டிய வாழ்வு நமக்களிக்க
ஏகன் இறையை வேண்டிடுவார்

துன்பங்கள் நீங்கி சுகம் அளிக்க
துயரங்கள் இல்லா வாழ்வாங்க

நிம்மதியான நெஞ்சம் பெற
தூய இறையிடம் பரிந்துரைப்பார்

இறைவனை என்றும் நினைவு கொள்வோம்
இறைத்தூதரின் சொற்படி வழி நடப்போம்

இறைவனைத்தொழுதே துதித்திடுவோம்
இறை அச்சமுடன் நாம் வாழ்ந்திடுவோம்

எரியும் பகையினை அணைத்திடவே
அவன் பால் உலகை உயர்த்திடவே

தகிக்கும் பொறாமை தணிந்திடவே
வெறுக்கும் அவாவை ஒழித்திடவே

மனதினில் நாமே உறுதிகொள்வோம்
தொண்டால் நாமும் நிலைத்திடுவோம்

கற்றதன் பலனை கண்டிடுவோம்
இறைநபி வழியில் சென்றிடுவோம்

அத்தனை நலமும் நாம் பெறுவோம்
நம் நெஞ்சங்கள் நிறைந்திடும் இறை நினைவில்

Friday, July 2, 2010

ஏன் படைத்தாய் இறைவா!

மானுட ஜாதியை ஏன் படைத்தாய்
மனதினில் பொறாமையை ஏன் விதைத்தாய்

நெறியாய் வாழவும் தெரியவில்லை
நபி நேர் வழி காணவும் புரியவில்லை

தம்மின மனுஷ இதயங்களின்
உணர்வுகள் ஒன்றும் புரிவதில்லை

மனதினில் தோன்றிய கசடுகள்
எண்ணத்தில் உதித்த வக்கிரங்கள்
அத்தனையும் போட்டுடைத்து
நல்லிதயங்களை கொலை செய்யும்
கல்லிதயங்கள் ஏன் படைத்தாய்

தாந்தோன்றித்தனமாக நெறியின்றி
வாயில் வந்ததெல்லாம் பேசி
வார்த்தைகளால் விளையாடி
வஞ்சிக்கும் அவலம் இந்த
புவியார்க்கு இல்லாமல்
காத்தருள் காத்தருள் என்னிறைவா

அமைதியாய் வாழ்வதும் பிடிக்கவில்லை
எதிர்ப்பைக்காட்டவும் பிடிக்கவில்லை
இரண்டுக்கும் நடுவாய் வாழ்வதென்றால்
யாரும் துரும்பாய்.எறும்பாய் பிறக்கவில்லை.

இறுதி நபியை அனுப்பிவைத்தாய்
இகத்தை ஒளிவழி சேர்த்து வைத்தாய்
இன்னும் மனிதன் திருந்தவில்லை
மன இருளை விலக்கிட முனையவில்லை.

படித்ததில் பதிந்தவை