3,21,265 எழுத்துக்கள்
1,04,652 குறியீடுகள்
1,05,684 புள்ளிகள்
086,430 சொற்கள்
006,236 வசனங்கள்
000558 பிரிவுகள்
000114 அத்தியாயங்கள்
000030 பாகங்கள்
000007 மன்ஸில்கள்
சிரம் பணிந்து ஓத வேண்டிய வசனங்கள் : 14
மிக நீண்ட அத்தியாயம் : அல்பகறா(2ஆவது அத்தியாயம்)
சிறிய அத்தியாயங்கள் : அல் அஸ்ர்,அல் கவ்தர்,அன் நஸ்ர்
முதலாவதாக அருளப்பட்ட அத்தியாயம் : அலக் என்ற அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள்
குர் ஆன் அருளப்பட்ட காலங்கள் : 22 ஆண்டுகள்,5மாதங்கள்
குர் ஆனை எழுதி வைத்த 40 ஸஹாபாக்களில் முதன்மையானோர் அபுபக்கர்,உதுமான்,அலி,ஜைத்,இபுனு ஸாபித்,அப்துல்லாஹ் இபுனு மஸ்வூத்(ரலி) அவர்கள் ஆவார்கள்.
அகில உலகங்களுக்கும் அதிபதியான அல்லாஹ் ஜல்லஷானஹுத்தஆலாவினால் அகில உலகிற்கும் அருட்கொடையாக அவதரித்த முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் மூலமாக அகில உலகிற்கும் ஒரு நினைவுறுத்தலாக அருளப்பட்ட திருவேதம்தான் அல்குர் ஆன்.
1400 ஆண்டுகளுக்குமேல் மனித சமுதாயத்தின் சிந்தனையை உருவாக்கி செயல்முறையை ஒழுங்கு படுத்துவதில் அல்குர் ஆன் ஒப்புவமையற்ற இடத்தை பெற்று திகழ்கின்றது.
உலகிலே ஐந்தில் ஒரு பகுதியினருடைய வாழ்வில் ஒளிவிளக்காக இந்த ஒப்பற்ற வேதம் விளங்கி வருகின்றது.உலகில் மகத்தான மாற்றங்கள் விளைவித்த மாபெரும் நூற்களிலே அதிகமாக மக்களிடையே ஓதப்படும் அரும் நூல் ஐயத்திற்கிடமின்றி அல்குர் ஆன் தான் அனைவரும் என்று ஏற்றிப்புகழ்கின்றனர்.
அருளப்பட்ட மூலமொழியிலேயே ,அகிலமெங்கும் உள்ள மக்களால் ஓதவும்,முழுதும் மனனம் செய்யவும்கூடிய ஒரே வேத நூலாகவும் அல் குர் ஆன் திகழ்கின்றது.
ஆணவத்தாலும்,அறியாமையாலும் அழிந்து போன ஆது,ஸமூது போன்ற சரித்திரத்திற்கும் முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களின் வரலாற்றை எடுத்துரைப்பதின் மூலம் கடந்த காலத்தையும்,மனித வாழ்வின் தினசரி நிகழ்ச்சிகளின் சின்னசின்ன பிரச்சினைகளுக்கு கூட வழிகாட்டுவதின் மூலம் நிகழ்காலத்தையும்,மறு உலக வாழ்வையும்,எதிர்காலத்தின் முன்னறிவிப்புகளையும் கூறுவதன் மூலம் எதிர்காலத்தையும் எடுத்துரைக்ககூடிய முக்காலத்திற்கும் பொருந்திய வேதமாக மிளிர்கின்றது அல்குர் ஆன்.
அதன் மூல மொழி அறியாதவர்கள் கூட அதனை ஓதக்கேட்டால் அவர்களுடைய உள்ளத்தைக்கவர்ந்து,உணர்வைக்கிளறி,கண்களில் நீர் கசியசெய்யும் ஓசை நயம் கொண்டதாக இம்மாமறை விளங்குகின்றது.
ஒரு நாட்டினருக்கோ,மொழியினருக்கோ,இனத்தினருக்கோ,என்றில்லாமல் உலக மக்கள் அனைவரின் நல் வாழ்வுக்குமாக அருளப்பட்டுள்ளது அல் குர் ஆன். அதன் அரிய போதனைகளும்,உயரிய பொருட்செறிவும் இதற்கு சான்றுகளாகும்.
வானவர் ஜிப்ரீல் (அலை)அவர்கள் மூலம் நபி யவர்களுக்கு அல்லாஹ் அருளிய இந்த நன் மறைக்கு எத்தனையோ நாமங்கள் இருந்த போதிலும் இந்த மாமறையிலேயே பல இடங்களில் குறிப்பிடப்படும்"குர் ஆன்" என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகின்றது.
குர் ஆன் என்ற அரபி பததிற்கு ஓதப்பட்டது,ஓதக்கூடியது,ஓத வேண்டியது என்று பொருள்படும்.முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல்
(அலை)அவர்கள் மூலமாக ஓதப்பட்ட இவ்வேதம் ,மனித சமுதாயம் தன்னுடைய மேன்மையைக்கருதி "ஓத வேண்டியது"என்ற பொருளையே தன் பெயராக கொண்டிருப்பதும்,இவ்வேதமே இவ்வுலகில் அதிக மக்களால் ஓதப்படுவதும் சிந்தித்து,நயக்கதக்கதாகவும் இருக்கின்றது.
நபி(ஸல்)அவர்களின் 40ஆவது வயதில் ரமளான் திங்களில் பிந்திய இரவுகளில் ஒரிரவன்று மக்கா நகருக்கு அருகிலுல்ல "ஹிரா" குகையில் அவர்கள் தனித்திருந்து இறைவனை சிந்தித்து இருந்த நேரத்தில்தான் அல்குர் ஆன் முதன் முதலாக அருளப்பட்டது..அந்த இரவுதான் கண்ணியத்திற்கும்,சங்கைக்கும் உரிய லைலத்துல் கத்ர் (கண்ணியமிக்க இரவு)என்று அறியப்படுகின்றது.
யா அல்லாஹ் என் பிழைகள் பொருத்தருள்வாயாக!